EPS is going to Delhi tomorrow: நாளை டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

சென்னை: Edappadi Palaniswami is going to Delhi tomorrow. ஜி20 மாநாடு குறித்த ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கும் நாடாளுமன்ற விவகாரத்துறையிலிருந்து அழைப்பு வந்துள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாருமான எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள் நாளை, அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் டெல்லிக்கு புறப்பட்டு, நாளை மாலை பிரதமர் தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேச வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.