Drivers Recruitment: அரசு போக்குவரத்து கழகத்தில் 807 டிரைவர்கள் நேரடி நியமனம்

சென்னை: Tamil Nadu Government Rapid Transport Corporation has released notification for direct recruitment for 807 driver posts. தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 807 டிரைவர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு லிமிடெட், சென்னை கழகத்தில் ஓட்டுநர் உடன் நடத்துநர் (Driver-cum-Conductor) பணியிடம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், கும்பகோணம் கழகத்தில் ஓட்டுநர் (Driver) பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவது தொடர்பான ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இன்றியமையாத பொது போக்குவரத்து சேவைகளை தினந்தோறும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் வழங்கி வருகின்றது.

அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பினை தொடர்ந்து, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு லிமிடெட்டில், 685 ஓட்டுநர் உடன் நடத்துநர் (Driver-cum- Conductor) பணியிடங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட்டில், 122 ஓட்டுநர் (Driver) பணியிடங்களையும் நேரடி நியமனம் மூலம் அதாவது வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் செய்தி தாள்களில் விளம்பரம் செய்து நிரப்பிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அவர்களால், ஓட்டுநர் உடன் நடத்துநர் பணியிடங்களுக்குத் தேவையான கல்வித் தகுதி, வயது மற்றும் பிற தகுதிகள் பெற்ற தகுதிவாய்ந்த நபர்களின் மூப்பு பட்டியல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களிலிருந்து பெறப்படும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் மேலாண் இயக்குநர் அவர்களால், ஓட்டுநர் பணியிடங்களுக்குத் தேவையான கல்வித் தகுதி, வயது மற்றும் பிற தகுதிகள் பெற்ற தகுதிவாய்ந்த நபர்களின் மூப்பு பட்டியல் அப்போக்குவரத்துக் கழக வட்டார எல்லைக்குட்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலிருந்து பெறப்படும். மேலும், ஓட்டுநர் உடன் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த போக்குவரத்துக் கழகங்களால் செய்தித்தாள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து இணையவழியில் (online) விண்ணப்பங்கள் பெறப்படும்.

அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து தகுதி வாய்ந்த நபர்களை தெரிவு செய்வதற்காக அந்தந்த மேலாண் இயக்குநர்களால் குழு அமைக்கப்பட்டு, அக்குழு ஓட்டுநர் உடன் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான நபர்களை, சாலைப் போக்குவரத்து நிறுவனத்தின் (Institute of Road Transport) உதவியுடன் தற்போதுள்ள அரசு விதிமுறைகளின்படி தேர்வுச் செய்வார்கள்.

இதன் மூலம், பொது மக்களுக்கான பொது போக்குவரத்து சேவைகள் மேம்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.