DPI Campus is named after Professor Anbazagan: பள்ளிக்கல்வித்துறை வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் பெயர்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டிபிஐ வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழாவைப் போற்றும் வண்ணம் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சிக்கென ரூ.7500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகனாரின் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற மாபெரும் திட்டத்தை ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டு, நடப்பு ஆண்டிற்கு சுமார் ரூபாய் 1400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

அரசு எடுத்து வரும் பல்வேறு ஆசிரியர் மாணவர் நலன் சார்ந்த செயல்பாடுகளால் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடப்பு ஆண்டிலேயே பல்வேறு கட்டுமானத்திற்கும் மராமத்துப் பணிகளுக்கும் கூடுதலாக சுமார் 1400 கோடி ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார்கள்.

இத்துடன், பேராசிரியர் நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் D.P.I வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் திருவுருவச்சிலை நிறுவப்படுவதுடன் அவ்வளாகம் “பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்” என்றும் அழைக்கப்படும்.

மேலும் கற்றல் கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்குப் பேராசிரியர் பெயரில் விருதும் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 19ம் தேதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினவ் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு பிறந்த நாளின் தொடக்க நாளான்று, சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்திற்கு “பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை” என்று பெயர் சூட்டி, அவ்வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பேராசிரியர் அன்பழகன் சிலையினை திறந்து வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

The Chief Minister has announced that the TBI campus where the school education department is functioning will be named after Professor Anbazhagan.