Deepam Festival: அருணாசலேஸ்வரர் கோவிலைச் சுற்றி வாகனங்கள் செல்ல தடை

திருவண்ணாமலை: Vehicular movement is prohibited around the Arunachaleswarar temple. தீப திருவிழாவை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றி, 300 மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், தீப திருவிழா ஏற்பாடு பணிகள் குறித்து மூன்றாவது கட்ட ஆய்வு கூட்டம் நடந்தது.பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட கலெக்டர் முருகேஷ், எஸ்.பி., கார்த்திகேயன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது அமைச்சர் வேலு கூறுகையில், முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து தரும் வகையில் குடிநீர் வசதி முறையாக வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும். கிரிவலப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள கழிவறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

13 இடங்களில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட், 52 இடங்களில் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டறியும் வகையில், போலீசார் சார்பில், ‘உங்களுக்கு உதவலாமா’ என்ற, 85 பூத் அமைக்கப்பட்டுள்ளது.கோவிலை சுற்றி, 300 மீட்டருக்கு பைக், கார் உள்ளிட்ட எவ்வித வாகனமும் செல்ல அனுமதி கிடையாது. நகரின் முக்கிய பகுதிகளில், 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, காவல் துறை சார்பில் கண்காணிக்கப்படுகிறது.

இரண்டு நாட்களாக டி.ஜி.பி., சைலேந்திரபாபு கோவிலில் ஆய்வு செய்து, போலீசாரின் பாதுகாப்பு பணி குறித்து அறிவுறுத்தி உள்ளார். பாதுகாப்பு பணியில், 13 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுஉள்ளனர்.

எந்த ஆண்டும் இல்லாத வகையில் பக்தர்களின் வகதிக்காக 28 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. தற்காலிக பஸ் நிலையத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தூய்மை பணிகள் மேற்கொள்வதற்கு 3 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இனி வரும் காலங்களில் நிரந்தரமாக கிரிவலப்பாதை முழுவதும் தினந்தோறும் தூய்மைப்படுத்தும் பணியில் சாலை பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

கிரிவலப்பாதையில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றி அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் சேகரித்து வைக்க வேண்டும். இந்தாண்டு 230 நபர்களுக்கு மட்டுமே அன்னதானம் வழங்க அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். தூய்மை பணிகள் தொய்வின்றி உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும்.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி 2500 பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள். மலையேறும் பக்தர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு 3 மருத்துவ குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பணியில் உதவி செய்ய முன்வரும் தனியார் குழுக்களும் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் 14 கிலோ மீட்டர் கிரிவலப்பாதை மற்றும் கோவில் வளாகத்திலும் 108 அவசர சேவை ஊர்தி தயார் நிலையில் நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் தீபத்திருவிழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையினை அமைச்சர் பார்வையிட்டார். தொடர்ந்து கிரிவலப்பாதையில் அண்ணா நுழைவு வாயில் அருகில் ஈசான்ய மைதானம், அடிஅண்ணாமலை, வருணலிங்கம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்களின் அடிப்படை வசதிகளான நவீன மயமாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிவறை வசதிகள், நடைபாதை உள்ளிட்டவைகளும் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டத்தில் சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், முதன்மை தலைமை பொறியாளர் (பொதுப்பணித்துறை) விஸ்வநாத், மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.