surveillance cameras: கண்காணிப்பு கேமரா இருக்கும் பகுதிகளில் குற்றங்கள் குறைவு : சாலைக்கு ஒரு கேமரா அமைக்க திட்டம்

பூட்டிய வீடுகள் குறித்து வீட்டின் உரிமையாளர்கள் தகவல் தெரிவிப்பதில்லை. வீட்டில் கண்காணிப்பு கேமரா இருந்தால் அதை செல்போன் தொடர்பில் இணைக்கலாம். இதன் மூலமாக திருடர்கள் வந்தால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க முடியும்.

கோவை: Crime reduction in areas with surveillance cameras, Plan to set up a camera on the road : கோவை நகர் மட்டுமின்றி நாட்டின் பெரும்பாலான நகரங்களில் நகை பறிப்பு, பிக்பாக்கெட், வழிப்பறி அதிகமாகிவிட்டது. விபத்து, தாக்குதல், போக்குவரத்து பிரச்னை, அடிதடி மோதல், திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகளில் சாட்சிகளை விட, கேமரா காட்சிகள்தான் முக்கிய ஆதாரமாக இருக்கிறது. கைரேகை, தடய அறிவியல் சோதனையைவிட கேமரா காட்சி பதிவை கண்டறியும் சோதனைதான் அதிகம் நடக்கிறது. சாலைக்கு ஒரு கேமரா கட்டாயம் என்ற திட்டத்தை செயலாக்க நகர, புறநகர் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். வணிக பகுதியில் குறிப்பாக ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, பெரிய கடை வீதி, தியாகி குமரன் வீதி, கிராஸ்கட் ரோடு, டி.பி ரோடு, 100 அடி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வியாபார கடைகளில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் 75 சதம் கடைகளில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக போலீசார் அடுக்குமாடிகளை கணக்கெடுத்து அங்கே கண்காணிப்பு கேமரா (surveillance camera) அமைக்க வலியுறுத்தினர். விடுமுறை மற்றும் விசேஷ நிகழ்ச்சியில் நடக்கும் போது  பொதுமக்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விடுகிறார்கள். வீட்டில் யாருமில்லாத நேரத்தில் திருடர்கள் வீட்டிற்குள் புகுந்து கைவரிசை காட்டுகிறார்கள். 90 சதவீத திருட்டுகள் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் நடப்பதாகவும், 70 சதவீத திருட்டுகள் இரவு நேரத்தில் நடப்பதாகவும் தெரியவந்துள்ளது. கண்காணிப்பு கேமரா இருந்தால் மட்டுமே திருட்டுகளில் குற்றவாளிகளை எளிதாக பிடிக்க முடியும். கைரேகை, மோப்ப நாய், தடயம் மூலமாக குற்றவாளிகளை பிடிப்பதில் சாத்தியம் குறைவாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து நகரில் அபார்ட்மென்டுகளில் குடியிருப்பு சங்கங்களின் உதவியுடன் கேமரா அமைக்கும் பணி நடக்கிறது. நகரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அபார்ட்மென்ட் அமைந்துள்ளது. அனைத்து அபார்ட்மென்டுகளிலும் கேமரா பொருத்தப்பட்டு அந்தந்த போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் கண்காணிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

கட்டுப்பாட்டு அறை (Control room) மூலமாகவும், அபார்ட்மென்ட் கேமராக்களின் பதிவுகளை காணவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. விடுமுறையில் வெளியூர் செல்பவர்கள், சம்பந்தப்பட்ட போலீசாருக்கு எந்த தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப் பட்டிருந்தது. பூட்டிய வீடுகளை கண்காணிக்க ரோந்து போலீசாருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் வீடு பூட்டப்பட்ட விவரங்களை போலீசாருக்கு தெரிவிக்க தயங்குவதாக கூறப்படுகிறது. இதனால்தான் இரவு நேர திருட்டுகளை தடுப்பதில் சிக்கல் இருப்பதாக தெரிகிறது. நகரில் சுமார் 1 லட்சம் கண்காணிப்பு கேமராக்களும், புறநகரில் சுமார் 80 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்களும் பயன்பாட்டில் உள்ளன. கேமரா பதிவுகள் அடிப்படையில் நடப்பாண்டில் பல ஆயிரம் வழக்குகளில் அபராதம் விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. வழக்கு ஆவணங்களிலும் கண்காணிப்பு கேமரா காட்சி விவரங்கள் குறிப்பிடப்பட்டு வருகிறது.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியது; ஒரு சாலையின் சந்திப்பு பகுதியில் ஒரு கேமரா இருந்தால் அந்த வழியாக எந்த வாகனம், நபர் சென்றாலும் வந்தாலும் கண்டறிய முடியும். கேமராவில் சிக்கிய நபர் எந்த சூழலிலும் தப்ப முடியாது. அவரை எப்படியாவது அடையாளம் கண்டறிந்து பிடிக்க முடியும். எனவேதான் கேமராவை வைக்க பல்வேறு தரப்பினரிடம் வலியுறுத்தி வருகிறோம். பல இடங்களில் புகார்தாரர்கள் கேமரா காட்சி பதிவு ஆதாரத்துடன் புகார் தருகிறார்கள். இதன் மூலமாக நடவடிக்கை சரியாக எடுக்க முடிகிறது. விசாரணையும் எளிதாக முடிகிறது. பூட்டிய வீடுகள் குறித்து வீட்டின் உரிமையாளர்கள் தகவல் தெரிவிப்பதில்லை. வீட்டில் கண்காணிப்பு கேமரா இருந்தால் அதை செல்போன் தொடர்பில் இணைக்கலாம். இதன் மூலமாக திருடர்கள் வந்தால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க முடியும். கண்காணிப்பு கேமரா (surveillance camera) இருக்கும் பகுதிகளில் குற்றங்கள் குறைந்து வருகிறது என்றார்.