Construction of metro tunnel: சென்னை கிரீன்வேஸ் சாலையில் மெட்ரோ சுரங்கம் அமைக்கும் பணி துவக்கம்

சென்னை: Construction of metro tunnel on Chennai Greenways road started. சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-II, வழித்தடம்-3-இன் சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளில், கிரீன்வேஸ் சாலை முதல் அடையாறு சந்திப்பு வரை சுரங்கம் அமைக்கும் பணி தொடங்கியது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் மெட்ரோ இரயில் சேவையை சென்னையில் துவங்கியது. சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம் 1 மற்றும் கட்டம் 1 நீட்டிப்புக்கு பிறகு வழித்தடம் 1 மற்றும் 2-ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் II-ல் 118.9 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை, மாதவரம் பால்பண்ணை அருகில் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் வழித்தடம் 3-இன் சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளில், மாதவரம் பால்பண்ணை மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து மாதவரம் நெடுஞ்சாலை மெட்ரோ நிலையம் வரை 1.4 கி.மீ நீளத்திற்கு முதல் சுரங்கம் தோண்டும் பணியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 13.10.2022 அன்று தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து இன்று 16.02.2023 சென்னை, கிரீன்வேஸ் சாலை நிலையம் அருகில், சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-II, வழித்தடம்-3-இல் சுரங்கப்பாதை கட்டுமான பணிகளில், கிரீன்வேஸ் சாலை நிலையத்திலிருந்து அடையாறு சந்திப்பு நிலையம் வரை 1.226 கிமீ நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-II-ல் மொத்தம் 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. அவற்றில் வழித்தடம்-3-இல் ஒப்பந்தம் TU02 (கெல்லிஸ் முதல் தரமணி வரை இதற்கான ஒப்பந்ததாரர் லார்சன் & டூப்ரோ) 8 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் கெல்லிஸ் முதல் தரமணி வரை பயன்படுத்தப்படுகிறது.

இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் ஹெர்ரென்க்னெக்ட் நிறுவனம் தயாரித்தது. திட்டங்களில் பயன்படுத்தப்படும் சுரங்கம் தோண்டும் இயந்திரங்களுக்கு பெயரிடும் ஒரு வழக்கம் உள்ளது. அந்த வகையில் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் சுரங்கம் தோண்டும் இயந்திரத்திற்கு காவேரி என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் முக்கியமாக டிபி சாலைக்கு கீழே சுரங்கப்பாதை அமைத்து, திரு.வி.க. பாலம் அருகே அடையாறு ஆற்றைக் கடந்து அடையார் சந்திப்பு நிலையத்தை ஆகஸ்ட் 2023க்குள் வந்தைடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரீன் வேஸ் சாலையில் இருந்து இயக்கப்படும் அடுத்த சுரங்கம் தோண்டும் இயந்திரத்திற்கு அடையாறு என்று பெயரிடப்பட்டுள்ளது.