College Students strike: நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகள் போராட்டம்

நாமக்கல்: Students strike at Namakkal Government Women’s College. நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியின் முதல்வரை இடமாற்றம் செய்யக்கோரி, வணிகவியல் மற்றும் பொருளாதாரத்துறை மாணவிகள் கல்லூரி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கலில் திருச்சி சாலையில் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் இளங்களை மற்றும் முதுகலை பிரிவில் பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன. இக்கல்லூரியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தக்கல்லூரியின் முதல்வராக பால் கிரேஸ் பணியாற்றி வருகிறார்.

பால் கிரேஸ் ஏற்கனவே பணியாற்றிய அரசு கல்லூரியில் அம்பேத்கர் படத்தை அகற்றியது சம்மந்தாக எழுந்த புகாரின் அடிப்படையில், அவர் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இங்கு வந்து கடந்த ஒரு ஆண்டாக கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்சினைகள் காரனமாக கடந்த மாதம் கல்லூரிக் கல்வித்துறை மூலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் அவர் சென்னை ஐகோர்ட்டில் மனு செய்து மாறுதல் உத்தரவிற்கு தடை உத்தரவு பெற்று, மீண்டும்நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் முதல்வர் பணியில் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் கல்லூரியின் வணிகவியல் துறை தலைமை பேராசிரியர் நல்லுசாமி தனது துறையில் படிக்கும் மாணவிகளின் இண்டன்ஷிப் பயிற்சிக்கு , ஒப்புதல் கையெழுத்து பெறுவதற்காக கல்லூரி முதல்வர் பால் கிரேஸை அவரது அறைக்கு சென்று சந்தித்துள்ளார். அப்போது பேராசிரியர் நல்லுசாமியை மாணவிகள் முன்னிலையில் முதல்வர் தகாத வார்த்தைகள் திட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கல்லூரி முதல்வரை மாற்றக் கோரி வணிகவியல் துறை மற்றும் பொருளாதாரத் துறையைச் சார்ந்த மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கல்லூரி நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் கல்லூரி முதல்வர் பால் கிரேஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு மாணவிகள் மறுத்துவிட்டனர். தொடர்ந்து நாமக்கல் தாசில்தார் சக்திவேல் மற்றும் போலீசார் அங்கு வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கல்லூரி முதல்வரை இடமாற்றம் செய்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று மாணவிகள் கூறினர்.

இதையொட்டி, மெயின் ரோட்டில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, கல்லூரி வளாகத்திற்குள் சென்று போராட்டத்தை தொடருமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர். பின்னர் மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் சென்று தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரி முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.