Collector Inspection of Krishnagiri KRP Dam: கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கிருஷ்ணகிரி: District Collector Inspection of Krishnagiri KRP Dam. கேஆர்பி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இன்று (30.8.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் வட்டம் கிருஷ்ணகிரி கேஆர்பி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணையின் தற்போதைய கொள்ளளவு 1513.38 கன அடி நீர்மட்டம் 50.65 அடி (11.00 AM) அணையின் நீர்வரத்து 16250 கன அடி உள்ளது. அணையிலிருந்து 16250 கன அடி அளவு உபரிநீர் பிரதான மதகு மூலம் வெளியேற்றப்படுகிறது.

இதனால் 8 கிராமங்கள் பெரியமுத்தூர், திம்மாபுரம், சுண்டேகுப்பம், காவேரிப்பட்டிணம், கால்வேஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சௌட்டஹள்ளி, தளிஹள்ளி ஆகிய கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு தென்பெண்பெண்ணையாற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது. தென்பெண்ணை ஆற்றில் நீர் வெளியேறிக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் பொது மக்கள் யாரும் தென்பெண்ணை ஆற்றை கடக்க கூடாது என்றும், கால்நடைகளை நீர்நிலை பகுதிகளுக்கு அழைத்து செல்ல கூடாது என்றும், பெய்து வரும் கனமழை காரணமாக ஏரி, குளம், குட்டைகள் பெருமளவில் நீர் நிரம்பி உள்ள காரணத்தினால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நீர்நிலைகளுக்கும், ஆற்று பகுதிகளுக்கு குளிக்கவோ, வேடிக்ககை பார்க்க செல்வதை அனுமதிக்க கூடாது என தெரிவித்தார்.

அணையின் பாதுகாப்பு கருதி நீர் முழுவதும் அணையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டியுள்ளதால் தென்பெண்ணையாற்றின் ஆற்றங்கரையோரத்தில் மற்றும் தாழ்வானப்பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும், தொடர் மழை பெய்து வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்ககைககள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 37 இடங்கள் ஆபத்தான பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக மணல் மூட்டைகள், பாதுகாப்பு உபகரணங்கள், தீயணைப்பு துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை அலுவலர்கள் மூலமாக குழு அமைக்கப்பட்டு அனைத்து தாலுக்காவிலும் 37 குழுவினர் தயார் நிலையில் உள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி தெரிவித்தார்.

இவ்வாய்வின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ச.குமார், உதவி செயற்பொறியாளர்கள் உ.அறிவொளி, வே.காளிபிரியன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.