UPSC: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடத்திய சிவில் சர்வீசஸ் முதன்மை (Mains Examination) தேர்வு, ஏப்ரல் முதல் மே வரையில் நடத்திய நேர்முகத் தேர்வு (Personality Interview) அடிப்படையில் இந்த இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டுளளது. ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் மற்றும் மத்தியப் பணிகள் குரூப் ஏ மற்றும் குரூப் பி பணிகளுக்கு மொத்தம் 685 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இந்த தேர்வு முடிவுகளை ஆணையத்தின் http://www.upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையளத்தில் காணலாம்.
126 பேர் இருப்புப் பட்டியலில் (Reserved Candidates) வைக்கப்பட்டுள்ளனர் (சிவில் சர்வீஸ் தேர்வு விதிகள் எண் -16 (4) & (5)_க்கு இணங்க). இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பொதுப் பட்டியலில் தேர்வாகி, பதவிகளைத் தேர்வு செய்யும் பட்சத்தில், காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த பட்டியல் பராமரிக்கப்படுகிறது.
சிவில் சர்விஸ் தேர்வில் பெண்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். கடந்தாண்டு தேர்வில், முதல் 20 இடங்களில் 10 பெண்கள் தேர்ச்சிப் பெற்றிருந்தனர். இந்நிலையில், இந்த முறை முதல் நான்கு இடங்களையும் பெண்களே தக்க வைத்துக் கொண்டுள்ளனர். இது மிகவும் ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தேசிய அளவில் முதல் இடத்தை சுருதி சர்மா பிடித்துள்ளார்.
அதேபோல, தமிழக அளவில் கோவையைச் சேர்ந்த ஸ்வாதிஸ்ரீ என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். கோவை தொப்பம்பட்டியை சேர்ந்த தியாகராஜன் – லட்சுமி தம்பதியின் மூத்த மகள் ஸ்வாதிஸ்ரீ, 25. இளங்கலை வேளாண் பட்டதாரி. வேளாண் கல்வி மீது பள்ளி பருவத்திலிருந்தே நாட்டம் அதிகம். கோவை வேளாண் பல்கலையின் கீழ், தஞ்சாவூரில் உள்ள தனியார் வேளாண் கல்லுாரியில், இளங்கலை வேளாண் பட்டம் பெற்றவர். மூன்றாவது முறையாக தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார்.
ஸ்வாதிஸ்ரீ முதல்முறை தேர்வு எழுதி போதிய மதிப்பெண் கிடைக்காததால் தேர்வாகவில்லை. இரண்டாம் முறை தேர்வெழுதி தேசிய அளவில் 126-வது இடம் பிடித்து ஐ.ஆர்.எஸ் பணிக்குத் தேர்வானார். ஆனால், ஐ.ஏ.எஸ்ஸின் மீதிருந்த தீராத கனவின் காரணமாக, மூன்றாவது முறையாக தேர்வெழுதி தேசிய அளவில் 42-வது இடத்தையும் தமிழ்நாடு அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: Venkaiah Naidu: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 3 நாடுகளுக்கு பயணம்



