Coimbatore Car Blast Nia Investigation: கோவை கார் வெடிப்பு வழக்கில் மீண்டும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

கோவை: கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் (Coimbatore Car Blast Nia Investigation) முன்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கார் வெடிகுண்டு வெடித்தது. அப்போது தாக்குதல் நடத்துவதற்காக காரில் வெடிகுண்டுடன் ஓட்டி வந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், முகமது தவுபிக், உமர் பாரூக், பெரோஸ்கான், சேக் இதயத்துல்லா, சனோபர் அலி உள்ளிட்ட 11 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் கைதாகியுள்ள முகமது தல்கா, முகமது ரியாஸ், முகமது நவாஸ், முகமது தவுபிக், சனோபர் அலி, ஷேக் இதயத்துல்லா ஆகிய 6 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து கடந்த 2 நாட்களாக சென்னையில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். நேற்று (ஜனவரி 10) அவர்கள் 6 பேரையும் கோவைக்கு அழைத்து வந்து போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து மீண்டும் விசாரணை நடத்தி வந்த நிலையில், 6 பேரில் சனாபர் அலி, முகமது ரியாஸ், நவாஸ், தவுபிக் ஆகிய 4 பேரை மட்டும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நள்ளிரவு 12 மணிக்கு கோட்டைமேடு பகுதியில் உள்ள ஜமேஷா முபின் வீட்டிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது முபின் வீட்டில் சந்தேகித்திற்கிடமான பொருட்கள் இருந்துள்ளது. இதனை பார்த்த அதிகாரிகள் அது தொடர்பாகவும் 4 பேரிடமும் விசாரித்தனர். மற்றவர்களின் வீடுகளுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. இந்த காட்சிகள் அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.