Chief Secretary inspects Koovam and Adyar river works: கூவம், அடையாறு நதிகள் சீரமைப்புப் பணிகளை தலைமைச் செயலாளர் ஆய்வு

சென்னை: Chief Secretary inspects Koovam and Adyar river rehabilitation works. சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் இணைந்து மேற்கொண்டு வரும் கூவம் மற்றும் அடையாறு நதிகள் சீரமைப்புப் பணிகளை தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை தொல்காப்பியப் பூங்கா, கோட்டூர்புரம் மாடுலர் சுத்திகரிப்பு நிலையம், சைதாப்பேட்டை தாடண்டர் நகர் மாடுலர் சுத்திகரிப்பு நிலையம், மாநகராட்சி தேனாம்பேட்டை மண்டலம் ஜி.என்.செட்டி சாலையில் மழைநீர் வடிகால் கட்டும் பணி, கோடம்பாக்கம் மண்டலம் காசி திரையரங்கம் அருகில் நெடுஞ்சாலை துறை சார்பில் மழைநீர் வடிகால் கட்டும் பணி, நெசப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகளை தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இன்று (11.09.2022) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொல்காப்பியப் பூங்கா 58 ஏக்கர் பரப்பளவில், 2008-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 2011-ஆம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சீரமைப்புப் பணிகள் முற்றிலுமாக மேற்கொள்ளப்பட்டு அடையாறு நீர்நிலைப் பகுதிகளில் முதல் கட்டமாக மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்ட தற்பொழுது பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பூங்காவில் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் மேம்பாட்டினை உணர்த்திடும் வகையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சார் துறைகளுடன் இணைந்து மேற்கொண்டு வரும் கூவம் மற்றும் அடையாறு நதிகள் சீரமைப்புப் பணிகள் மற்றும் சுமார் ரூபாய் 2,371 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பக்கிங்காம் கால்வாய் மற்றும் அதன் பிரதான கால்வாய்கள், கூவம் மற்றும் அடையாறு ஆறுகளின் வடிகால்கள் சீரமைப்பு, எண்ணூர் கழிமுகப் பகுதியின் சுற்றுச்சூழல் சீரமைப்பு ஆகிய பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.

அடையாற்றில் நேரடியாக கழிவுநீர் கலப்பதை தடுத்து சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை ரூபாய் 123.19 கோடி மதிப்பீட்டிற்கு நிருவாக ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டப்பணிகளின்கீழ் 7 இடங்களில் அடையாற்றில் நேரடியாக கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கானத் திட்டங்களை ரூபாய் 61.11 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தி வருகிறது. 5 பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மீதமுள்ள 2 பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இதேபோன்று அடையாற்றில் ரூபாய் 4.32 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் 0.60 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட மாடுலர் சுத்திகரிப்பு நிலையம் முழுமையாக முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

அடையாறு மற்றும் கோட்டூர்புரம் பகுதியில் ரூபாய் 16.16 கோடி மதிப்பீட்டில் அடையாறு ஆற்றின் வலது கரைப்பகுதியில் நேரடியாக கலக்கும் கழிவுநீரை இடைமறித்து மாற்று வழிகளை அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் கழிவுநீர் குழாய் அமைத்தல், இயந்திர நுழைவு வாயில் அமைத்தல், விசைக்குழாய் அமைத்தல், கழிவுநீரிறைக்கும் நிலையங்கள் அமைத்தல் ஆகிய பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன.

மாம்பலம் நீரோடையில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரிக்க சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் ரூபாய் 14.21 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் 4 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையத்தில் 98 சதவீதம் பணிகள் நிறைவடைந்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

மேலும் பெருநகர சென்னை மாநகராட்சி தேனாம்பேட்டை மண்டலம் ஜி.என்.சாலையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூபாய் 6.2 கோடி மதிப்பீட்டில் 950 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் கட்டும் பணியும், கோடம்பாக்கம் மண்டலம் காசி திரையரங்கம் அருகில் நெடுஞ்சாலை துறை சார்பில் மழைநீர் வடிகால் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த திட்டப்பணிகளை பார்வையிட்டு அரசு தலைமைச் செயலாளர் ஆய்வு செய்தார்.

நெசப்பாக்கம் கழிவுநீரகற்று நிலையத்தில் ரூபாய் 47.24 கோடி மதிப்பீட்டில் 10 எம்.எல்.டி. திறன் கொண்ட மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய செயல்பாட்டினை அரசு தலைமைச் செயலாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இத்திட்டத்தின் மூலம் மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீர் போரூர் ஏரியில் நிரப்பும் வகையில் சுமார் 12 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய்கள் அமைக்கும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இத்திட்டப் பணிகள் சென்னை ஐ.ஐ.டி.யின் ஆலோசனையின்படி செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த அரசு தலைமைச் செயலாளர் இப்பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஆர்.கிரிலோஷ் குமார், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குநர் இராஜகோபால் சுங்கரா, பெருநகர சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) சங்கர் லால் குமாவத், துணை ஆணையர் (மத்திய வட்டாரம்) ஷேக் அப்துல் ரகுமான், சென்னை குடிநீர் வாரிய பொறியியல் இயக்குநர் ஷமிலால் ஜான்சன், சென்னை குடிநீர் வாரிய தலைமை பொறியாளர் .போ.ராஜாராம்ஆகியோர் உட்பட அரசுத்துறை உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.