Chennai Metro – BEL Agreement: பெல் நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம்

சென்னை: Chennai Metro Rail Corporation has signed an agreement with BEL. நடை மேடை தடுப்பு கதவுகள் தயாரிக்க பெல் நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பயணிகளின் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-1ன் கீழ் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்களின் நடைமேடைகளில் இறக்குமதி செய்யப்பட்ட நடைமேடை தடுப்பு கதவுகள் (Platform Screen Doors) அமைத்துள்ளது.

இந்த அமைப்பினை இந்தியாவில் தயாரிப்பதற்கான முயற்சியை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் பாரத மின்னணு நிறுவனம் கைகோர்த்து “இந்தியாவில் தயாரிப்பு” (Make in India) என்ற முறையில் செயல்படுத்த உத்தேசித்துள்ளது.

இதற்கென ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் 27-10-2022 அன்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் பாரத மின்னணு நிறுவனம் ஆகியவற்றிற்கிடையே, பாரத மின்னணு நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் கையெழுத்தானது.

எம்.ஏ.சித்திக், மேலாண்மை இயக்குநர் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் தினேஷ் குமார் பத்ரா, தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், பாரத மின்னணு நிறுவனம் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன்படி, விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையம் முதல் புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ நிலையம் வரையிலான வழித்தடம்-1ல் (நீல வழித்தடம்) உள்ள 7 மெட்ரோ நிலையங்களின் 13 நடைமேடைகளில், பாதி உயரத்திலான நடைமேடை தடுப்பு கதவு அமைப்புகளை மேம்படுத்தி, நிறுவி மற்றும் இயக்குவதற்கான ஒப்பந்தமாகும்.

இதன்படி, சென்னை மெட்ரோ இரயிலுக்கு தேவையான பாதி உயரத்திலான நடைமேடை தடுப்பு கதவு அமைப்பினை மேம்படுத்துவதற்கான பணியை, மூன்று கட்டங்களில் 36 மாதத்தில் பாரத மின்னணு நிறுவனத்தின் பன்ஞ்குளா பிரிவு மேற்கொள்ளும், முதல் கட்டத்தில் நடைமேடை தடுப்பு கதவின் மாதிரி அமைப்பை மேம்படுத்தி தன்னிசையான பாதுகாப்பு மதிப்பீட்டாளரின் சான்றிதழ் பெறப்படும். 2-வது மற்றும் 3-வது கட்டங்களில் இந்த அமைப்பு விம்கோ நகர் பணிமனை முதல் புது வண்ணாரப்பேட்டை மெட்ரோ நிலையத்திற்கிடையே உள்ள கட்டம்-1ன் நீட்டிப்பு மெட்ரோ நிலையங்களின் 13 நடைமேடைகளில் நிறுவி செயல்படுத்தப்படும்.

இந்த நிகழ்வில், ராஜேஷ் சதுர்வேதி (இயக்குநர் அமைப்புகள் மற்றும் இயக்கம்), பாரத மின்னணு நிறுவனத்தின் பன்ஞ்குளா பிரிவின் பொது மேலாளர் பிரபா கோயல், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பாரத மின்னணு நிறுவனம் ஆகியவற்றின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.