Chennai Corporation request to hoist national flag: சென்னையில் வீடுகள், கடைகளில் தேசயக்கொடி ஏற்ற சென்னை மாநகராட்சி வேண்டுகோள்

சென்னை: Chennai Corporation request to hoist national flag: சென்னையில் வீடுகள், கடைகளில் தேசயக்கொடி ஏற்ற சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தேசிய அளவில் “சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா” என அனைத்து வீடுகளிலும் ஆகஸ்டு 13 முதல் 15 வரை மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி, தேசப்பக்தி உணர்வை மேலும் வலுப்படுத்தும் விதமாக சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இல்லந்தோறும் மூவண்ணக்கொடி ஏற்றும் திட்டத்தில் மக்கள் பெரும் உற்சாகத்துடன் பங்கேற்று வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மக்களின் இந்த உணர்வு மற்றும் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பிரதிபலிப்பதாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

ரக்ஷாபந்தன் தினத்தையொட்டி தாம், இளைஞர்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு மூவண்ணக்கொடி வழங்குவது குறித்த வீடியோ ஒன்றையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தியர்கள் அனைவரும் மூவண்ணக்கொடியுடன் சிறப்பு பிணைப்பைக் கொண்டுள்ளனர். எனது அருமை இளம் நண்பர்களுக்கு, இன்று காலையில் மூவண்ணக்கொடியை வழங்கினேன். அவர்களது முகத்தில் கண்ட மகிழ்ச்சி இதன் சிறப்பை உணர்த்தியது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றி வைக்க மத்திய அமைச்சர்களும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் வீடுகள், கடைகளில் தேசயக்கொடி ஏற்ற சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக, அனைத்து வீடுகளிலும், கடைகளிலும், அரசுக் கட்டடங்கள், வணிக வளாகங்கள், சுங்கச்சாவடிகள் மற்றும் காவல் நிலையங்களிலும் தேசியக்கொடி ஏற்றுவது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேசியக் கொடி தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதிப்படுத்தவும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 02.08.2022 அன்று வணிகர் நலச் சங்கங்களுடன் கூட்டம் நடத்தி 13.08.2022 முதல் 15.08.2022 வரை அனைத்து வீடுகள் மற்றும் கடைகளில் மூவர்ண தேசியக் கொடி ஏற்றுவது சம்மந்தமாக வலியுறுத்தப்பட்டது.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி, 1 முதல் 15 மண்டலங்களின் மண்டல அலுவலர்கள், அனைத்து குடியிருப்பு நலச் சங்கங்கள் மற்றும் வணிகர் நலச் சங்கப் பிரதிநிதிகளுடன் 03.08.2022 அன்று மண்டல அளவில் கூட்டம் நடத்தப்பட்டு 13.08.2022 முதல் 15.08.2022 வரை மூன்று நாட்கள் அனைத்து வீடுகள் மற்றும் கடைகளில் மூவர்ண கொடி ஏற்றுவது சம்மந்தமாக வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து, பூக்கடை மார்கெட் மற்றும் பாண்டி பஜார் மார்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேசிய கொடி தட்டுப்பாடின்றி கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி களப் பணியாளர்கள் மூலமாக தேசியக் கொடி ஏற்றுவது தொடர்பாக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே, பொதுமக்கள் இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாகவும், தங்களின் தேசப்பற்று உணர்வை போற்று வகையிலும் தங்களது வீடு மற்றும் கடைகளில் ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரை தேசியக் கொடியினை ஏற்றி வைக்கவும், ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பின்னர் மூவர்ண தேசியக் கொடியினை பாதுகாப்பாக பத்திரப்படுத்தி வைக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.