TN Rain: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

TN Rain
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

TN Rain: அக்னி நட்சத்திரம் முடிந்துவிட்ட நிலையிலும் கோடை வெயிலின் தாக்கம் சற்றும் குறையாமலேயே இருந்துவருகிறது. தமிழகத்தில் இந்த வெயிலின் உக்கிரத்தை, வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சியால் அவ்வப்போது பெய்யும் மழைதான் தணிக்கிறது.

அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

அதைத்தொடர்ந்து நாளை மறுதினமும் (செவ்வாய்க்கிழமை), அதற்கு மறுநாளும் (புதன்கிழமை) தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மேற்கு திசையில் இருந்து மணிக்கு 40 கி.மீ. முதல் 60 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இன்று இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திருமண பத்திரிகை வழங்கிய நயன்தாரா-விக்னேஷ் சிவன்