Car accident : கார் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

ஹுப்பள்ளி : Car accident, 3 members of same family killed : ஹுப்பள்ளி-புணே சாலையில் உள்ள ஜகளூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரமிருந்த தர்காவின் மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளியைச் சேர்ந்தவர் ஹனுமந்தப்பா பேவிகட்டே. இவரது மனைவி ரேணுகா. இவர்களது மருமகன் ரவீந்திரா. இவர்கள் உள்ளிட்ட 4 பேர் காரில் பெங்களூரில் நடைபெற்ற உறவினர்களின் புதுமனை புகுவிழாவிற்கு ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனராம். ஹுப்பள்ளி-புணே சாலையில் (Huballi-Pune Road) உள்ள ஜகளூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரமிருந்த தர்காவின் மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த ஹனுமந்தப்பா பேவிகட்டே, ரேணுகா, ரவீந்திரா ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காயமடைந்த ரவீந்திராவின் மனைவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து குந்தகோலா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

இரும்பு கம்பியால் தாக்கி பீகாரைச் சேர்ந்தவர் கொலை

பெங்களூரு யலஹங்கா மாருதிநகரில் (Marutinagar) வசித்து வந்தவர் 51 வயது அமர்நாத் மகாதோவ். பீகாரைச் சேர்ந்த இவர், பெங்களூரில் கட்டடத் தொழில் செய்து வந்தாராம். இவர் துவார்கா நகரில் உள்ள கடை ஒன்றில் இரும்பு கம்பிகளை திருடி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த கடையில் பணி செய்து வந்த 3 பேர் சனிக்கிழமை இரவு அமர்நாத்தை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அமர்நாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி அமர்நாத் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக அமர்நாத்தின் மகன் அளித்த புகாரின் பேரில், பகலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தலை மீது கல்லைப் போட்டு ஒருவர் கொலை

கர்நாடகம் மாநிலம் பெலகாவி மாவட்டம் அதானி அருகில் ஐகாலா காவல் நிலைய (Aikala Police Station) சரகத்தில் 38 வயது பாண்டுரங்கா பெலகலி என்பவர் தலை மீது கல்லைப் போட்டு யாரோ கொலை செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், அங்கு சென்று பாண்டுரங்காவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிந்த போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தீ விபத்து : 3 பேர் காயம்

பெங்களூரு டிஜே ஹள்ளி ஷாந்தாபுரா (Bengaluru DJ Halli Shantapura) முக்கியச்சாலை 2 வது குறுக்குச்சாலையில் உள்ள வீடு ஒன்றில், ஞாயிற்றுக்கிழமை கைகளுக்கு தெளிக்க வைக்கப் பட்டிருந்த சானிடைசரில் எதிர்பாராத விதமாக தீ பற்றி எரிந்துள்ளது. இந்த தீ மளமளவென வீடு முழுவதும் பரவி உள்ளது. இதில் வீட்டில் இருந்த ஜான்சன், சந்தோஷ் ஆகியோர் தீக்காயமடைந்தனர். தீ விபத்தையடுத்து வீட்டிலிருந்து தப்பியோடிய தில்ஷா என்பவர் படிக்கட்டில் கீழே விழுந்து காயமடைந்துள்ளார். காயமடைந்த 3 பேரும் பௌரிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இது குறித்து டிஜி ஹள்ளி போலீசார் வழக்கு பதிந்து தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.