BIS conducted an Enforcement Search: ஓசூர் அருகே தனியார் நிறுவனத்தில் பிஐஎஸ் அதிகாரிகள் சோதனை

ஓசூர்: BIS conducted an Enforcement Search and Seizure operation today. ஐஎஸ்ஐ முத்திரையை தவறாக பயன்படுத்தப்படுவதாக தனியார் நிறுவனத்தில் பிஐஎஸ் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

ஐஎஸ்ஐ முத்திரையை தவறாக பயன்படுத்தப்படுவதாக இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகத்திற்கு வந்த புகாரை அடுத்து, பிஐஎஸ் அதிகாரிகள் குழு ஓசூர் அருகே கோவிந்த அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீபாலாஜி கெபாசிட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஐஎஸ்ஐ முத்திரையை தவறாக பயன்படுத்தி மோட்டார் மின்தேக்கிகள் உற்பத்தி செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சுமார் 155 எண்ணிக்கையிலான மாற்று மின்னோட்ட மோட்டார் மின்தேக்கிகள் (Capacitors) பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் இந்திய தர நிர்ணயச் சட்டம், 2016 இன் கீழ் குற்றவாளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

ஐஎஸ்ஐ முத்திரையை தவறாக பயன்படுத்துவோர் பற்றி, பிஐஎஸ் தெற்கு மண்டல அலுவலகம், சிஐடி வளாகம், 4வது குறுக்கு சாலை, தரமணி, சென்னை- 113 என்ற முகவரியிலோ, BIS CARE APP செயலி மூலமோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தெரிவிக்கலாம். மேற்கண்ட தகவல் பிஐஎஸ் தெற்கு மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மத்திய அரசின் திட்டங்கள் அமலாக்கம் குறித்து மத்திய அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் ஆய்வு

தமிழ்நாட்டில் மத்திய அரசின் திட்டங்கள் அமலாக்கம் குறித்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை இணையமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் இன்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆய்வு செய்தார்.

இந்த கூட்டத்தில் தமிழக அரசின் திட்டமிடுதல் மற்றும் வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், சென்னை மாநகராட்சி இணை ஆணையர் சங்கர்லால் குமாவட் ஆகியோர் கலந்து கொண்டு மத்திய அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டில் அமலாக்கப்படும் நிலை குறித்து எடுத்துரைத்தனர். இந்த கூட்டத்தில், பல்வேறு துறைகளின் அலுவலர்களும் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து, தேசிய புள்ளியியல் அமைப்பின் தமிழ்நாடு மண்டல அதிகாரிகளுடன் பணிகள் முன்னேற்றம் குறித்து மத்திய இணையமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் ஆலோசனை நடத்தினார். இந்த அமைப்பின் துணைத் தலைமை இயக்குனரும், மண்டல அதிகாரியுமான பி டி சுபா, பெங்களூருவில் உள்ள தென் மண்டல அலுவலகத்தின் துணைத் தலைமை இயக்குனர் ஆர் மனோகர் உள்ளிட்ட அதிகாரிகள் தேசிய புள்ளியியல் அமைப்பின் தமிழ்நாடு மண்டல பணிகள் குறித்து எடுத்துரைத்தனர்.