Army recruitment in Vellore: வேலூரில் நவம்பர் மாதம் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்

சென்னை: Army recruitment camp in Vellore in November: வேலூரில் நவம்பர் மாதம் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 17ம் தேதி, ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், பீகார், உத்தரபிரதேசம், அரியானா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் அக்னிபத் திட்டத்தின் மூலம் இளைஞர்கள் தேர்வு செய்யும் உச்சபட்ச வயது வரம்பை 21 ல் இருந்து 23 ஆக மத்திய அரசு அதிகரித்து உள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு நடைபெறாத நிலையில், ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு குறித்து ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர்,, “ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு செயல்முறை விரைவில் தொடங்கவுள்ளதாகவும், அடுத்த 2 நாட்களுக்குள் http://joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். அதன் பிறகு எங்கள் ராணுவ ஆள்சேர்ப்பு அமைப்பு விரிவான அட்டவணையை அறிவிக்கும்.

அக்னிவீர் டிசம்பரில் (2022) எங்கள் படைப்பிரிவு மையங்களில் பயிற்சியில் சேருவர். பின்னர் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் பயிற்சிக்கு பிறகு வழக்கமான பணியில் இணைவர். இவ்வாறு ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அக்னிபத் திட்டத்தின் கீழ், ராணுவத்திற்கு அக்னி வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்சேர்ப்பு முகாம், வரும் நவம்பர் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை வேலூரில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டின் கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கற்பட்டு ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட புதுச்சேரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இதில் பங்கேற்கலாம்.

அக்னிவீர் பொதுப்பணி, அக்னிவீர் தொழில்நுட்பப் பணி, எழுத்தர், பண்டகக் காப்பாளர் மற்றும் டிரேட்ஸ்மேன் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், அவரவர் தகுதிக்கேற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள், www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வாயிலாக 05, ஆகஸ்ட் 2022 முதல் 3, செப்டம்பர் 2022 வரை தங்களது பெயர்களை பதிவு செய்யவேண்டும். இவர்களுக்கான தேர்வு அனுமதிச் சீட்டு 1, நவம்பர் 2022 அன்று வெளியிடப்படும். விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு தேதி மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் அனுமதிச் சீட்டில் இடம் பெற்றிருக்கும்.

மேலும் விளக்கங்கள்பெற ஆள்சேர்ப்பு அலுவலகம் (தலைமையகம்) , புனித ஜார்ஜ் கோட்டை வளாகம், சென்னை 600 009 என்ற முகவரியிலோ, 044 – 2567 4924 என்ற தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம். தேர்வு நடைமுறைகள் நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் முற்றிலும் தானியங்கி முறையில் மேற்கொள்ளப்படும். எனவே, ஆட்சேர்ப்புக்கு உதவுவதாகவோ அல்லது வேலை வாங்கித் தருவதாகவோ கூறி, மோசடியில் ஈடுபடுவோரை நம்பி விண்ணப்பதாரர்கள் ஏமாந்துவிட வேண்டாம் என்றும் எச்சரிக்கப்படுகிறது.