சென்னை: Issuance of appointment orders to Government Polytechnic College Lecturers. உயர்கல்வித் துறை சார்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் விரிவுரையாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 1024 நபர்களுக்கு பணிநியமன ஆணையினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று, உயர்கல்வித் துறை சார்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் விரிவுரையாளர்பணியிடத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1024 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 11 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை தமிழக முதல்வர் வழங்கினார்.
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில், விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு உரிய நபர்களை தெரிவு செய்திட ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 27.11.2019 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டு, 8.12.2021 முதல் 13.12.2021 வரை கணினி வழித் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அதன்படி, விரிவுரையாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 1024 நபர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர். தா. கார்த்திகேயன், தொழில்நுட்ப கல்வி ஆணையர் க. லட்சுமிபிரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல், பதிவுத்துறை சார்பில் போலி ஆவணத்தை ரத்து செய்யும் அதிகாரம் பதிவுத்துறைக்கு வழங்கப்பட்டதை தொடங்கி வைக்கும் விதமாக, போலி ஆவணப்பதிவினால் பாதிக்கப்பட்ட உண்மையான சொத்து உரிமையாளர்கள் ஐந்து நபர்களுக்கு நில அபகரிப்பாளர்களால் மோசடியாக ஆவணப் பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து அதற்கான ஆணைகளை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன் பணிஓய்வு பெறுவதையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.



