Annamalai warning to Tamil Nadu Govt: நிலம் எடுப்பதை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதம்: தமிழக அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

மேட்டுப்பாளையம்: BJP state president Annamalai has warned the Tamil Nadu government that if they take away the farmers’ land in Annur, they will fast till death. அன்னூரில் விவசாயிகளின் நிலத்தை எடுத்தால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டம், அன்னுார், மேட்டுப்பாளையம் தாலுகாக்களில் உள்ள 6 ஊராட்சிகளில் தொழிற்பூங்கா அமைக்க 3,731 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு கடந்த அக்டோபர்11ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்த, கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் நேற்று அன்னுாரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இதில் பேசிய அவர், விவசாயிகளுக்கு விளை நிலம்தான் வாழ்வாதாரம்; குலதெய்வம். மத்திய அரசின் புள்ளிவிவரப்படி, தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்கு என ஒதுக்கப்பட்ட, 48 ஆயிரத்து, 195 ஏக்கர் நிலம் காத்துக்கொண்டிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பே நாங்குநேரியில், 2,518 ஏக்கரில் தொழில் பேட்டையை துவக்கினர்; தற்போது ஒரு தொழிற்சாலை கூட அங்கு இல்லை.

இங்கு ஏற்கனவே நுாற்பாலை, பவுண்டரி என, 12 வகை தொழில்கள் நடக்கின்றன. அவிநாசி, சோமனுாரில் விசைத்தறிகளும், பல்லடத்தில் கோழிப்பண்ணையும், திருப்பூரில் பின்னலாடை தொழிலும் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு தமிழகத்திற்கு குறைந்த அளவே அன்னிய முதலீடு வந்துள்ளது.

வளமான அன்னுாரில் ‘சிப்காட்’ துவக்குவதை கைவிட்டு விட்டு துாத்துக்குடி, திருநெல்வேலி, பெரம்பலுார், அரியலுார், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் துவக்கலாம்; அங்கே இளைஞர்கள் வேலைக்கு காத்திருக்கின்றனர். இங்கு நிலம் கையகப்படுத்துவோருக்கு தேவை விவசாய நிலம் கிடையாது; தண்ணீருக்காக தான் இங்கு வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள தேனி மாவட்டத்தில், கேரள அரசு ஒரு சர்வே எடுத்து வருகிறது; 80 ஏக்கர் நிலத்தை எடுத்துக்கொண்டது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து கவலைப்படாமல், கேரளாவில் பினராய் விஜயன் அழைத்தால் போய் பேசிவிட்டு, அங்கு, 2024ம் ஆண்டு தேர்தலுக்கு ஏதாவது எலும்புத் துண்டு கிடைக்குமா என்று பார்க்கிறார். துணை பிரதமர் ஆவதற்கு அவரை ‘தாஜா’ செய்கிறார்.

முல்லைப் பெரியாறு அணையில், 50 சதவீத உரிமையை கேரளாவுக்கு விட்டுக் கொடுத்தது தி.மு.க., அரசின் சாதனை. பிரதமர் மோடியின் நெஞ்சம் எப்போதும் தமிழகத்துக்காக துடித்துக் கொண்டிருக்கிறது. என்னிடத்தில் காசி சங்கமம் நிகழ்ச்சிக்கு செல்வோர் குறித்து விசாரித்தார். விவசாய நிலத்தை எடுப்பதற்காக ஊருக்குள் அதிகாரிகள் வந்தால் விடமாட்டோம். இதை எதிர்த்து நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன். இனி இது உங்கள் பிரச்னை அல்ல; இது எங்கள் பிரச்னை என அவர் பேசினார்.