Annamalai reply TN Police soon: தமிழக காவல் துறைக்கு விரைவில் பதில்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

சென்னை: Annamalai said that he will give an answer to the Tamil Nadu Police Department soon. தமிழக காவல்துறை இன்று வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில் விரைவில் வழங்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக காவல் துறை மீதும், ஆளும் திமுக மீதும் கடந்த சில நாட்களாகவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இது மாநிலம் முழுவதும் பெரும் தாக்கத்தையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து தமிழக காவல் துறை தெரிவிக்கையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு குறித்து விசாரணை நடந்த கொண்டிருக்கும்போதே, பல கருத்துக்களைக் கூறி புலன் விசாரணையை திசை திருப்ப முயற்சிக்கிறார்.

வழக்கை தாமதமாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு அனுப்பியதாக அண்ணாமலை கூறுவது தவறு. எந்த தாமதமுமின்றி முறையாக பின்பற்றப்பட்டு, மாநில அரசு, ஒன்றிய அரசுக்கு முறையாக அறிக்கை அனுப்பி, அதன்பிறகு வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஆனால் இந்த வழக்கில், ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பிக்கும் முன்னரே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கோவை கார் வெடிப்பு நிகழ்வை NIA விசாரிக்க பரிந்துரை செய்தார்.

இதற்கு முன்னால் நிகழ்ந்த இது போன்ற நிகழ்வுகளில் சில மாதங்கள் கழித்துத்துக்கூட வழக்குகள் NIA-விடம் ஒப்படைக்கப்பட்டன, அதுவும் சில வழக்குகளில், ஆவணங்கள் பல மாதங்களுக்குப் பின்னரே NIA-விடம் ஒப்படைக்கப்பட்டன. தற்போது திடீரென்று வெடிகுண்டு நிகழ்வு கோவையில் நடக்கப் போவதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் முன்பாகவே எச்சரித்ததாக புகார் கூறுகிறார்; இது அபத்தமானது.

மாநில அரசாங்கங்களுக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையில், குண்டு வெடிப்பு நடக்கப் போவதாக முன்கூட்டியே எச்சரித்ததாகவும், காவல்துறை அதை அலட்சியப்படுத்தியதாகவும் பொய்யாகப் பழி சுமத்தி ஒரு பொய் பிம்பத்தை எற்படுத்த முயல்கிறார். ஆனால் கோவை மாநகரைப் பற்றி எந்த தகவலும் சுற்றறிக்கையில் இல்லை. இது போன்ற உண்மையில்லாத மிகைப்படுத்தப்பட்ட செய்திகளையும், வதந்திகளையும் முன்னாள் கர்நாடக காவல் அதிகாரி பரப்பி தமிழ்நாடு காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை தெரிவித்தது.

இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழக காவல்துறை இன்று வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில் விரைவில் வழங்கப்படும்.

காவல்துறையில் பணிபுரியும் சகோதர சகோதரிகள் மீது எங்களுக்கு பெருமதிப்பும் மரியாதையும் உள்ளது. ஆனால் காவல்துறை டிஜிபி மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி காவல்துறையினராக இல்லாமல் திமுகவினரை போல் செயல்படுகிறார்கள். காவல்துறை உயர் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படாமல் ஆளும் திமுக அரசை மகிழ்விக்க மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை நாங்கள் முன் வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும் இரண்டு உயர் அதிகாரிகளுக்கு எதிராக மட்டுமே ஆனால் அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள காவல்துறையிலிருந்து பொதுவான ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளார்கள்.

காவல்துறையின் மாண்பை குறைத்து விட்டதாக என் மீது குற்றச்சாட்டு சுமத்துவதற்கு பதிலாக இது போன்ற தீவிரவாத சம்பவங்கள் எவ்வாறு நடந்தது என்பதனை அவர்கள் ஆராய வேண்டும். பல பெருமைகளுக்கு பெயர் போன தமிழக காவல் துறையில் அரசியலைப் புகுத்தி சிறுமைப்படுத்துவது யார் என்று மக்கள் அறிவர் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.