Anbumani requested for severe punishment: 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை; கடுமையாக தண்டிக்க அன்புமணி வேண்டுகோள்

திருவண்ணாமலை: Anbumani requested for severe punishment: போளூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு கடுமையாக தண்டிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே தனியார் பள்ளியில் யுகேஜி படித்த சிறுமிக்கு மயக்க சாக்லேட் கொடுத்து அரசு பள்ளி ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக திருச்செந்தூர் அருகே அவரை கைது செய்தனர். மேலும் பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாமக தலைவரும் எம்பி.,யுமான அன்புமணி ராமதாஸ் குற்றவாளியை கடுமையாக தண்டிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திருவண்ணாமலை மாவட்டம் கெங்கை சூடாமணி கிராமத்தில் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்த 4 வயது குழந்தை பள்ளி தாளாளரின் கணவர் காமராஜ் என்பவரால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

உலகம் அறியாத மழலைக்கு மயக்க மருந்து கொடுத்து சீரழித்தவர்களை மனித ஜென்மமாகவே கருத முடியாது. அதிலும் இந்த மிருகத்தனமான செயலை செய்த காமராஜ் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருவதாக தெரிகிறது. இவரைப் போன்றவர்கள் ஆசிரியர் சமூகத்திற்கே இழுக்கு.

குழந்தையை சீரழித்த ஆசிரியர் காமராஜ் கைது செய்யப்பட்டதுடன், பணியிடை நீக்கமும் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், இது போதுமானதல்ல. அவர் உடனடியாக வெளியில் வர முடியாதபடி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட வேண்டும்; போக்சோ வழக்கில் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

பள்ளியின் தாளாளர் ஒத்துழைப்பு இல்லாமல் இந்தக் கொடுமை நிகழ்ந்திருக்க முடியாது. கணவனின் மிருகத்தனமான செயலுக்கு உடந்தையாக இருந்த காமராஜின் மனைவியான பள்ளித் தாளாளரையும் வழக்கில் சேர்க்க வேண்டும்; அவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.

குழந்தைக்கு இழைக்கப்பட்ட கொடுமையை தாங்க முடியாமல் பள்ளி வளாகம் முன் பொதுமக்கள் கூடியிருப்பதால் பெரும் பதற்றம் நிலவுகிறது. உயரதிகாரிகளை அங்கு அனுப்பி பதற்றத்தை தணிக்கவும், இயல்பு நிலையை ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.