Anbumani condemns: தனியார் பால் விலை உயர்வுக்கு அன்புமணி கண்டனம்

சென்னை: Anbumani condemns private milk price hike. தனியார் பால் நிறுவனங்கள் பால விலை ரூ.2 உயர்த்தியுள்ளதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில் 5 தனியார் பால் நிறுவனங்கள் தங்களின் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளன. கடந்த ஓராண்டில் தனியார் பால் விலைகள் உயர்த்தப்படுவது இது ஐந்தாவது முறையாகும். சராசரியாக 70 நாட்களுக்கு ஒருமுறை தனியார் பால் விலைகள் உயர்த்தப்படுவது கண்டிக்கத்தக்கது.

ஆவின் நிறுவனத்துடன் ஒப்பிடும் போது நீல உறை பால் விலை லிட்டருக்கு ரூ.12 ( ஆவின் விலை ரூ.40/தனியார் விலை ரூ.52), பச்சை உறை பால் ரூ.20 (ரூ. 44/ரூ.64), ஆரஞ்சு உரை பால் ரூ.12 ( ரூ.60/ரூ.72) அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு சாமானிய மக்களை கடுமையாக பாதிக்கும்.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பால் சந்தையில் 84% தனியார் நிறுவனங்களிடம் உள்ளன. அதனால் அவை கூட்டணி அமைத்துக் கொண்டு நிர்ணயிப்பது தான் பால் விலை என்றாகி விட்டது. தனியார் நிறுவனங்களில் கட்டணக் கொள்ளையை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

தனியார் பால் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் ஆவின் நிறுவனம் அதன் சந்தைப் பங்கை வலுப்படுத்த வேண்டும். 16%பங்கை வைத்துக் கொண்டு ஆவின் நிறுவனத்தால் ஆதிக்கம் செலுத்த வேண்டும். ஆவினின் சந்தைப் பங்கு 50% ஆக உயர்ந்தால் தான் தனியார் நிறுவனங்களை கட்டுப்படுத்த முடியும்.

மக்களின் அத்தியாவசியத் தேவையான பால் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. அதை தடுப்பதற்கான உடனடி நடவடிக்கையாக பால் விலை ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைத்து, பாலுக்கான அதிகபட்ச விற்பனை விலையை நிர்ணயிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.