Anbumani condemned: நெய்வேலி பகுதி மக்களுக்கு மிரட்டல்: அன்புமணி கண்டனம்

சென்னை: Anbumani Ramadoss said that the government’s threat to people who refuse to give land to NLC is condemnable. என்எல்சிக்கு நிலம் தர மறுக்கும் மக்களுக்கு அரசு மிரட்டி வருவது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில், என்எல்சிக்கு நிலம் தர முடியாது என நெய்வேலி பகுதி மக்கள் திட்டவட்டமாக கூறி விட்ட நிலையில், சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு அதிகாரிகளையும், காவல்துறையினரையும் அனுப்பி, மக்களை மிரட்டி நிலங்களை பறிக்கும் முயற்சியில் கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

என்எல்சிக்காக அரசு கையகப்படுத்தத் துடிக்கும் நிலங்கள் வெறும் மண் அல்ல. அவை மக்களின் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டவை. நிலங்களை வழங்க முடியாது என்ற மக்களின் உணர்வை அரசும், ஆட்சியரும் உணர வேண்டும். மிரட்டி பறிக்கலாம் என்று நினைத்தால் அது பலிக்காது.

சிங்கூரில் மிரட்டியும், நந்திகிராமில் துப்பாக்கிச் சூடு நடத்தியும் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் பயனற்று போயின; இறுதியில் மக்கள் சக்திக்கு அதிகாரம் பணிந்தது; பறிக்கப்பட்ட நிலங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கே மீண்டும் கிடைத்தன என்பது மறக்க முடியாத, மறக்கக் கூடாத வரலாறு.

கடலூர் மாவட்ட மக்களின் நிலங்களையும், உரிமைகளையும் காக்க பா.ம.க. மட்டுமே போராடுகிறது. இறுதி வெற்றி கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது. தேவைப்பட்டால் எத்தனை மாதம் வேண்டுமானாலும் களத்தில் முகாமிட்டு, போராட்டத்தை தலைமையேற்று நடத்த தயாராக இருக்கிறேன்.

கடலூர் மாவட்ட சுற்றுச்சூழலை சீரழிக்கும் என்.எல்.சிக்கு துணை போகக்கூடாது; நெய்வேலியை நந்திகிராமம், சிங்கூராக மாற்றிவிடக் கூடாது. மக்களின் பக்கம் நின்று, கடலூர் மாவட்டத்திலிருந்து வெளியேறும்படி என்.எல்.சி நிர்வாகத்தை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என பதிவிட்டுள்ளார்.