Anbumani appeals to close Tasmac: மதுக்கடைகளை உடனடியாக மூட அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: Anbumani Ramadoss appeals to close liquor shops immediately. மதுக்கடைகளை உடனடியாக மூட தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், திருவேங்கடம் அருகே அவென்யூ பகுதியைச் சேர்ந்தவ செல்வராணி. இவர்மகளிர் பள்ளியின் தலைமை ஆசிரியரும், நல்லாசிரியர் விருது வாங்கியவருமாவார். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர்.

முதல் மகனான வின்சென்ட் ஜான், பச்சையப்பன் கல்லூரியில் மூன்றாம் ஆண்டும், இரண்டாவது மகனான செல்லி ஜான் பச்சையப்பன் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பும் படித்து வருகின்றனர். இதில், இரண்டாவது மகன் செல்லி ஜான், தனது தந்தையின் இறப்பிற்குப்பிறகு மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் (செப். 10) இரவும் வழக்கம்போல் செல்லி ஜான் குடித்துவிட்டு மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அதனை தாய் செல்வராணி தட்டிக்கேட்டபோது, அவரை மதுபோதையில் இருந்த செல்லி ஜான் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனை தட்டிக்கேட்ட அண்ணன் வின்சென்ட் ஜானிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆத்திரமடைந்த செல்லி ஜான், அங்கிருந்த கத்தியை எடுத்து அண்ணன் வின்சென்ட் ஜானின் மார்புப்பகுதியில் குத்தியதால் சம்பவ இடத்திலேயே அண்ணன் வின்சென்ட் ஜான் கீழே சரிந்து விழுந்து, துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து செல்லி ஜான் மீது வழக்குப்பதிவு செய்த காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர், அவரைக் கைது செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில், காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் மது போதையில் தாயை தாக்க முயன்ற போது, தடுக்க வந்த அண்ணனை தம்பி கத்தியால் குத்தி கொடூரமாக படுகொலை செய்திருக்கிறான். மது மனிதனை மிருகமாக்கும் என்பதற்கு இதை விட வேதனையான எடுத்துக்காட்டு எதுவும் இருக்க முடியாது.

கொலை செய்த தம்பிக்கு 17 வயது தான். அவரது தாய், தந்தையர் இருவரும் ஆசிரியர்கள். 12-ஆம் வகுப்பு பயிலும் அவர் நன்றாக படிக்கக் கூடியவர் தான். ஆனால், இத்தனை நல்ல விஷயங்களையும் சிதைத்து அந்த சிறுவனை கொலைகாரனாக்கியிருக்கிறது மதுபோதை. அப்படியானால் அது எவ்வளவு கொடியது?

மனிதன் இயல்பான நிலையில் தாயை தாக்க முனைய மாட்டான்; அண்ணனை கொலை செய்ய முயலமாட்டான். ஆனால், பதின்வயதை தாண்டாத சிறுவன் இத்தகைய கொடூரங்களை நிகழ்த்தியிருப்பதற்கு காரணம் அவனை இயக்கிய மது அரக்கன் தான். அந்த சிறுவன் கஞ்சாவுக்கும் அடிமை எனக் கூறப்படுகிறது.

இது போன்ற கொடிய நிகழ்வுகள் வாரம் ஒன்று நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இதற்கான தீர்வு என்ன? என்பது அரசுக்கும் தெரியும். எனவே, இனியும் தாமதிக்காமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளை உடனடியாக மூடி, மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.