ராஜீவ் இளைஞர் மேம்பாட்டு மையத்தில் பயிலும் மாணவர்கள் 29 பேருக்கு கொரோனா

corona-virus
ராஜீவ் இளைஞர் மேம்பாட்டு மையத்தில் பயிலும் மாணவர்கள் 29 பேருக்கு கொரோனா

Corona virus: ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் பயிலும் 29 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இரு தினங்களுக்கு முன்பு மாணவர்களுக்கு லேசான கொரோனா அறிகுறி தென்பட்டுள்ளது. உடனடியாக அருகே உள்ள சுகாதாரத்துறையினர் அவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 235 மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின்படி, 21 பெண்கள், 8 ஆண்களுக்கு என 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே 2 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மேலும் 29 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 31-ஆக அதிகரித்திருக்கிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து தனிமைப்படுத்தும் முயற்சியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க: Liquor sale: நாடு முழுவதும் பீர், மது விற்பனை 18 சதவீதம் அதிகரிப்பு