2,000 people rescued in Chaturagiri hill: சதுரகிரி மலையில் சிக்கிய 2000 பக்தர்கள் வெள்ளத்திலிருந்து பத்திரமாக மீட்பு

விருதுநகர்: 2000 people trapped in Chaturagiri hill safely rescued from flood: ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைக் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் 4,500 அடி உயரத்தில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை நாளில் 4 நாட்களும், பௌர்ணமி நாளில் 4 நாட்களும் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர்.

இந்த கோவிலில் வருடம் தோறும் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஆடி அமாவாசை திருவிழாவிற்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த 25ம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை 6 நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

மேலும் 26.07.22 முதல் 29.07.22 வரையிலான நான்கு நாட்கள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் யாரும் இரவில் தங்கக்கூடாது எனவும், பிளாஸ்டிக் பொருட்களை அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மலையேறினர். நேற்று இரவு சதுரகிரி மலை கோயிலில் பெய்த கனமழை காரணமாக கோவிலுக்கு செல்லும் மாங்கனி ஓடை, சங்கிலி பாறை உள்ளிட்ட ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் கோவிலிருந்து பக்தர்கள் அடிவாரத்தை நோக்கி கீழே இறங்கினர். அப்போது பக்தர்கள் ஏராளமானோர் வெள்ளத்தில் சிக்கினர். இந்நிலையில், வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறை உதவியுடன் கயிறு கட்டி பக்தர்களை பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர் ஓடைகளில் வெள்ளம் சீரானவுடன் அவர்களை பாதுக்காப்பாக கீழே இறங்கினர்.

இதனைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று சதுரகிரி கோவிலுக்கு செல்ல வருகை தந்த நிலையில், பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் பெரும் ஏமாற்றத்துடன் அங்கேயே காத்திருந்தனர். கோயிலுக்கு சென்ற பக்தர்கள் கீழே இறங்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டு, மலைப்பகுதியிலேயே அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஓடைகளில் நீர்வரத்து குறைந்ததை அடுத்து 4 மணிநேர காத்திருப்புக்குப் பின் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் மலையேற தொடங்கினர்.