ராமேஸ்வரம்: 1.20 million green line shrimp fry released into the ocean: பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பொரிப்பகங்களில் வளர்க்கப்பட்ட 1.20 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே மரைக்காயர் பட்டினத்தில் மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. இது, மத்திய அரசின் வேளாண் அமைச்சகத்தின் வாயிலாக கடந்த 1947-ம்ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி நிறுவப்பட்டது. கடந்த 1967-ம் ஆண்டு முதல் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐசிஏஆர்) கீழ் இயங்கி வருகிறது.
மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் இயற்கையான கடல் வளத்தை புதுப்பிக்கவும், இறால் உற்பத்தியை அதிகரிக்கவும் மண்டபத்தில் அமைந்துள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம், பச்சை வரி இறால் குஞ்சுகளை, பொரிப்பகங்களில் வளர்த்து, கடலில் விடும் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறது.
இதனால், இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதோடு, இப்பகுதியில் நீடித்து இறால் வளத்தை பாதுகாக்கவும், பராமரிக்கவும் வழிவகை செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் ரூ.168.948 லட்சம் மதிப்பீட்டில், 200 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகளை, தமிழ்நாட்டின் கடல் பகுதியான மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி பகுதிகளில் விடப்படும்.
நேற்று (20.08.2022) 1.20 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகளை, வேதாளையில் உள்ள மன்னார் வளைகுடா கடற்பகுதியில் மண்டபம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைவர், டாக்டர் ஜி . தமிழ்மணி கடலில் விட்டார். வேதாளை மீனவர் சங்க தலைவர்கள், உள்ளூர் மீனவர்கள், மண்டபத்திலுள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இத்தகைய முயற்சிக்கு மத்திய அரசு மற்றும் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்திற்கு நன்றி தெரிவித்த மீனவர்கள் பச்சை வரி இறால் வளத்தை பாதுகாக்க, இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும் என்றனர். இந்நிகழ்ச்சியை, மண்டபம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய மூத்த விஞ்ஞானி, டாக்டர் பி. ஜான்சன் ஒருங்கிணைத்தார்.



