IPL 2022: ராஜஸ்தான் அணியை வீழ்த்தி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது குஜராத் டைட்டன்ஸ்

ipl-2022-gujarat
ராஜஸ்தான் அணியை வீழ்த்தி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது குஜராத் டைட்டன்ஸ்

IPL 2022: கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. பிரம்மாண்ட இறுதி போட்டியில் குஜராத் – ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் நிறைவு விழா கலை நிகழ்ச்சிகள் மிக கோலாகலமாக நிறைவு பெற்றதை அடுத்து போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் – பட்லர் களமிறங்கினர்.

16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில் யாஷ் தயாள் பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து பட்லர் உடன் சாம்சன் ஜோடி சேர்ந்தார். பவுண்டரி மூலம் ரன் கணக்கை தொடங்கிய சாம்சன் குஜராத் கேப்டன் ஹர்திக் வீசிய பந்தில் சாய் கிசோர்-யிடம் கேட்ச் கொடுத்து 14 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு பக்கம் பட்லர் சிறிது அதிரடி காட்ட தொடங்க மறுபக்கம் விக்கெட் வீழ்ச்சி தொடர்ந்தது.

அணியை சரிவில் இருந்து மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பட்லர் 39 ரன்கள் எடுத்து பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிம்ரன் ஹெட்மயர் விக்கெட்டை தானே பந்துவீசி தானே கேட்ச்-யும் பிடித்து அசத்தினார் ஹர்திக் பாண்டியா.

அதை தொடர்ந்து வந்த வீரர்களும் பெரிதாக சோபிக்கவில்லை. இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். 131 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க வீரர் சாஹா 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் போல்டானார்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய வேட் 8 ரன்களில் ஆட்டமிழக்க போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதன் பிறகு ஜோடி சேர்ந்த சுப்மன் கில் – கேப்டன் பாண்டியா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் சஹால் இந்த ஜோடியை பிரித்து பாண்டியாவை 34 ரன்களில் வெளியேற்றினார்.

இருப்பினும் ஒருமுனையில் கில் நிதானமாக விளையாடி வர மில்லர் அவருடன் சிறப்பாக செயலபட்டார். இறுதியில் குஜராத் அணி 18.1 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. அறிமுகமான முதல் சீசனிலே குஜராத் அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

IPL 2022 Final GT vs RR Highlights: Gujarat Titans win maiden IPL trophy

இதையும் படிங்க: Tirupati temple: திருப்பதி கோவிலில் இலவச தரிசனத்துக்கு 20 மணி நேரம் ஆகிறது