3rd T20I: 3வது டி20 போட்டி: தொடரைக் கைப்பற்றி இந்தியா அபார வெற்றி

அகமதாபாத்: 3rd T20I. India Won by 168 Run. நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அபார வெற்றி பெற்று இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது. இதனை அடுத்து, அந்த அணி 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதில் ராஞ்சியில் நடைபெற்ற முதலாவது டி20 ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதையடுத்து, இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி, லக்னோவில் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி, டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

இந்நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் கடைசி மற்றும் 3வது டி-20 போட்டி, அகமதாபாத்தில் நேற்று நடைபற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 234 ரன்கள் குவித்தது.

அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரரான ஷுப்மன் கில், 63 பந்துகளில் 126 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனை அவர் படைத்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக, ராகுல் திரிபாதி 44 ரன்களும், ஹர்திக் பாண்டியா 30 ரன்களும் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறியது. வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, நியூசிலாந்து அணி 12.1 ஓவர்கள் முடிவில், அனைத்து விக்கெட்டுகளை இழந்து வெறும் 66 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.