Erode By Election: தமிழ் மகன் உசேன் டெல்லி பயணம்

சென்னை: AIADMK’s Tamil magan Usen has gone with the letters given by the general committee members. பொது குழு உறுப்பினர்கள் வழங்கிய கடிதங்களுடன் அதிமுகவின் தமிழ் மகன் உசேன் டெல்லி சென்றுள்ளார்.

கடந்த 4-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா உயிரிழந்ததை அடுத்து, அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தேர்தலில் போட்டியிட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் மனுதாக்க செய்துள்ளனர். ஆனால், அதிமுக தரப்பில் இரு அணிகளிடையே வேட்பாளர் குறித்து குழப்பம் நிலவி வருகிறது. அதிமுகவின் இபிஎஸ் அணியினர் தென்னரசையும், ஓபிஎஸ் தரப்பினர் செந்தில் முருகனையும் வேட்பாளராக அறிவித்தனர். இதனால் இரண்டு தரப்பில் யாருக்கு இரட்டை இலை கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது. இந்த விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தங்கள் தரப்பிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளடங்கிய பொதுக்குழுவின் முடிவின்படி தீர்மானிக்கலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பொதுக்குழுவின் வாக்கு அடிப்படையில் அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுக்கலாம் எனக் கூறிய நீதிபதிகள், பொதுக்குழு தேர்ந்தெடுக்கும் வேட்பாளரை தேர்தல் ஆணையத்துக்கு தமிழ்மகன் உசேன் அனுப்ப வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அதனை ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

அதன்படி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் கடிதம் மற்றும் படிவங்களை அனுப்பினார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.

கடிதத்தை நேற்றுக்குள் ஒப்படைக்கும்படி பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ் மகன் உசேன் அறிவுறுத்தியதன் அடிப்படையில் அனைவரும் கடிதங்களை ஒப்படைத்தனர். ஒப்புதல் படிவத்தில் தென்னரசை வேட்பாளராக குறிப்பிட்டு கடிதம் அனுப்பியதால் தமிழ் மகன் உசேன் மீது ஓபிஎஸ் தரப்பிலிருந்து கடும் அதிருப்தி ஏற்ப்பட்டுள்ளது. அவைத் தலைவர் எடப்பாடியின் முகவராக செயல்படுவதாகவும் ஓபிஎஸ் தரப்பினர் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்த பொது குழு உறுப்பினர்கள் வழங்கிய கடிதங்களை அதிமுகவின் தமிழ் மகன் உசேன் இன்று காலை 9.00 மணி அளவில் சென்னை இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார். அங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கிய கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கிறார்.