Prashant Kishor: பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க திட்டம்

பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க திட்டம்
பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க திட்டம்

Prashant Kishor: பிரபல தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர். பீகார் மாநிலத்தில் பிறந்த அவர் ஐபேக் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

பா.ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், தி.மு.க., ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்காக பிரசாந்த் கிஷோரின் நிறுவனம் தேர்தலில் பணியாற்றி உள்ளது.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக அவர் பல்வேறு ஆலோசனைகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு வழங்கி இருந்தார். இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் பலமுறை சோனியாவை சந்தித்து இருந்தார். அப்போது காங்கிரசில் இணைய வேண்டும் என்று அவர் விடுத்த அழைப்பை பிரசாந்த் கிஷோர் நிராகரித்தார்.

இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் இன்று காலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவை தொடர்ந்து அவர் அரசியல் கட்சியை தொடங்குகிறாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிரசாந்த் கிஷோர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:

ஜனநாயகத்தில் அர்த்தமுள்ள வகையில் பங்களிக்க வேண்டும் என்பது எனது தாகமாகும். மக்களுக்கு உகந்த கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்பதில் கடந்த 10 ஆண்டுகளாக ஏற்ற தாழ்வு மிகுந்த பாதையில் பயணித்தேன்.

பிரச்சினைகளை நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்க உள்ளேன். பீகாரில் இருந்து தொடங்க உள்ளேன்.

இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Amala Paul: ரிலீசுக்கு தயாரான அமலாபால் திரைப்படம்