O.Panneerselvam Statment: இரட்டை இலை சின்னம் வெற்றிபெற பாடுபடுவோம்: ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: AIADMK coordinator O. Panneerselvam has said that he will strive to win the double leaf symbol in Erode East constituency. ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னம் வெற்றிபெற பாடுபடுவோம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை பொறுத்தவரை இந்த இடைத்தேர்தலில் எந்தெந்த கோரிக்கைகளை மக்கள் முன், நாம் எடுத்து சொன்னோமோ அவற்றையெல்லாம் நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது. எதிர்வரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒற்றுமையாக போட்டியிட வேண்டும் என்றும் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அதற்கு கையெழுத்திட தயார் என்றும் அறிவித்தேன்.

அதற்கேற்ப இன்று உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன் என்று கூறியிருந்தேன். அதேபோல், இன்று இரட்டை இலை சின்னத்தின் மூலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடுகிற வாய்ப்பு உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் கிடைத்துள்ளது.

ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பொது வேட்பாளரை நிறுத்த நான் கையெழுத்திட தயார் என்று அறிவித்தேன், என்னை ஒருங்கிணைப்பாளர் என்று மட்டும் அல்ல, கட்சியிலேயே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் பகை உணர்வோடு கூறி வந்தனர். இந்நிலையில் என்னையும் என்னை சார்ந்தவர்களையும் உள்ளடக்கி எங்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர்தான்,பொது வேட்பாளரை பொதுக்குழு தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு எங்களை எதிர்த்தோருக்கு சரியான பாடமாக அமைந்துள்ளது.

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் என்கிற என்னுடைய பொறுப்பு நீடிப்பதற்கு எவ்வித தடையும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் விதிக்கப்படவில்லை. ஆனால், அதே நேரத்தில் சச்சரவுக்கு உள்ளான பொதுக்குழுவின் மூலம் தேர்வு செய்யப்பட்ட இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பொறுப்பில் நியமிக்கப்பட்ட முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி வகிக்கின்ற பொறுப்பை உச்சநீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அங்கீகரிக்கவில்லை.

இந்த இடைத்தேர்தலை பொறுத்தவரை இரட்டை இலை சின்னம் வெற்றி பெற நானும் என்மீது பற்றுக்கொண்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களும் மற்றும் என்மீது நம்பிக்கை கொண்ட பொதுமக்களும் பாடுபடுவோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.