DMK deputy general secretary resigns: திமுக துணைப்பொதுச்செயலாளர் விலகல்

சென்னை: DMK Deputy General Secretary Subbulakshmi Jagatheesan has officially announced her resignation from the party today. தி.மு.க துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியிலிருந்து விலகுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சுப்புலட்சுமி ஜெகதீசன் (Subbulakshmi Jagadeesan) 14 வது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கடந்த 2004ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். இவர் முன்னாள் மத்திய சமூக நீதி துறை அமைச்சராகவும் இருந்தவர்.

தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் துணை பொது செயலாளர் பதவியை ராஜினமா செய்ததாக தகவல்கள் பரவி வந்தன. நேற்று சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை. இதனால் சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்துவிட்டதாக செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தன.

திமுக துணை பொதுச்செயலாளர் பதவியை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்ததாக நேற்று தகவல் பரவியது. கட்சி மேலிடத்தின் மீது அதிருப்தியில் இருந்ததாகவும், இதனால் அவர் ராஜினாமா செய்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர் தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், சுப்புலட்சமி தனது பதவியிலிருந்து விலகியதாக நேற்று வெளியான தகவல்களை அவர் மறுத்தார்.

இந்நிலையில், சுப்புலட்சுமி ஜெகதீசன் தான் கட்சியிலிருந்து விலகுவதை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்ற நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில் விலகல் கடிதம் அளித்துள்ளேன். அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற விருப்பத்தினால் ஆகஸ்ட் 29ம் தேதி அன்றே திமுகவில் இருந்து விலகிவிட்டேன்.

முதலமைச்சராக பொறுப்பேற்ற ஸ்டாலின் நாடே பாராட்டும் வகையில் பணிகளை சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார். சுப்புலட்சுமி ஜெகதீசனின் ராஜினாமா ஏற்கப்படும் பட்சத்தில் அந்த இடம் காலியாகும். அடுத்த மாதம் நடைபெற உள்ள திமுக பொதுக்குழு கூட்டத்தில் புதிதாக துணை பொதுச் செயலாளர் ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.