Edappadi Palaniswami : ஓ. பன்னீர் செல்வத்துடன் சேர்ந்து செயல்பட முடியாது: எடப்பாடி பழனிசாமி

சென்னை: Cannot work together with O.Paneer Selvam : ஓ. பன்னீர் செல்வம் பதவி ஆசையால் என்னை அழைக்கிறார். அவருடன் சேர்ந்து செயல்பட முடியாது என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இது குறித்து எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: மாபெரும் இயக்கமான அதிமுகவை தன்வசப்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர் (Some people are trying to control AIADMK). அதனை தடுக்கும்போதுதான் சில பிரச்னைகள் உருவாகின்றனர். அதுதான் இன்றைய நிலைக்கு முக்கிய காரணம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இரண்டு அணியில் இருந்தவர்கள் 2017 ஆம் ஆண்டில் ஒன்றாக இணைந்தோம். அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள்தான் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கினர். அண்ணன் ஓ. பன்னீர்செல்வத்தை ஒருங்கிணைப்பாளராகவும், என்னை இணை ஒருங்கிணைப்பாளராகவும் தலைமைக் கழக நிர்வாகிகளும் தேர்ந்தெடுத்தனர். சட்ட விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது.

அதிமுகவில் சட்டவிதிகளை இயற்றவோ அல்லது மாற்றவோ பொதுக்குழுவிற்கு அதிகாரம் உள்ளது. செயற்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டால் மட்டுமே தீர்மானம் செல்லும். பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாததால் ஒருங்கிணைப்பாளர், என்ற இரட்டைத் தலைமைப் பதவி காலாவதி ஆகி விட்டது (The dual leadership has become obsolete). 2,663 பொதுக்குழு உறுப்பினர்கள் அதிமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இந்த நிலையில் கட்சியில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற தொண்டர்களின் விருப்பத்தை பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தனர். ஓ.பன்னீர்செல்வம் இப்படித்தான் அழைப்பு விடுப்பார். யாரை எதிர்த்து பதவி பெற்றாரோ அவர்களைத்தான் அழைப்பார். சசிகலாவை எதிர்த்துதான் ஓ பன்னீர் செல்வம் தர்ம யுத்தம் செய்தார்.

பின்னர் அவர்களுக்கு அழைப்பு விடுப்பது ஏன்?. பொதுக்குழுவிற்கு நாங்கள் அழைப்பு விடுத்தப்போது அதனை ஓ.பன்னீர்செல்வம் நிராகரித்தார். பின்னர் நீதிமன்றங்களை நாடிச் சென்றார். ரௌடிகளை வைத்து அதிமுக அலுவலகத்தையும், எங்களையும் தாக்கச் சொன்னார். அதிமுக அலுவலகத்திலிருந்து முக்கிய ஆவணங்களை ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் திருடிச் சென்றனர். அவருடைய மகன் எம்.பியாகவும், மற்றொருவர் மத்திய அமைச்சராக வேண்டும் என்று நினைக்கிறார். வேறு யாரைப் பற்றியும் அவருக்கு கவலை இல்லை. அவரும், அவரது மகனும் திமுகவுடன் ரகசிய தொடர்பை வைத்துள்ளனர் (They have secret contact with DMK). இதனை அதிமுகவின் எப்படி ஏற்றுக் கொள்வது. கட்சிக்கு விரோதமாக அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். திமுகவுடன் தொடர்பில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனுடன் எப்படி நாங்கள் இணைந்து செயல்பட முடியும். எனவே அவருடன் இணைந்து செயல்பட முடியாது. நீதிமன்றத்தில் நீதிபதி அவரது கருத்தை சொல்லிவிட்டார். அதை எதிர்த்து நாங்கள் மேல் முறையீடு செய்ய உள்ளோம்.

புரட்சி தலைவி அம்மாவிற்கு உண்மையான விசுவாசிகளாக இருந்தவர்கள் நாங்கள். எங்கள் பக்கம் அம்மாவின் விசுவாசிகள் மட்டுமே உள்ளனர். அதிமுகவின் சட்ட விதிகள் படிதான் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. நான் எப்போதும் சொந்த காலில் நிற்க விரும்புபவன். கட்சிக்கு சோதனையான காலங்களிலும் உண்மையாக செயல்பட்டேன். எந்த காலத்திலும் எந்த பதவிக்கும் நான் ஆசைப் பட்டதில்லை (I never aspired to any post). கட்சியில் படிப்படியாக உயர்ந்தவன் நான். நான் இல்லை என்றாலும் கட்சிக்கு வேறு ஒருவர் தலைவராக வருவார். ஆனால் கட்சி விதிகளை மதிக்க வேண்டும். அதிமுகவிற்கு எதிராக செயல்பட்ட ஓ.பன்னீர் செல்வத்துடன் எப்படி இணைய முடியும். திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டு மற்றும் 4 மாதம் ஆகிறது. இந்த ஆட்சியில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது என்றார்.