Venkaiah Naidu: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 3 நாடுகளுக்கு பயணம்

venkaiya-naidu
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 3 நாடுகளுக்கு பயணம்

Venkaiah Naidu: கபோன், செனகல், கத்தார் நாடுகளுக்கான பயணத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று தொடங்கினார். இந்த 3 நாடுகளுக்கு இந்திய துணை ஜனாதிபதி ஒருவரின் முதல் பயணம் இதுவாகும். அதிலும் குறிப்பாக கபோன், செனகல் நாடுகளுக்கு இந்தியாவில் உயர் பதவி வகிக்கும் ஒருவரின் முதல் பயணம் இது என துணை ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கபோன் நாட்டிற்கு சென்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கபோன் பிரதமர் ரோஸ் கிறிஸ்டியன் ஒசோகா ரபோண்டா மற்றும் அந்நாட்டின் நிதி மந்திரி மைக்கேல் மௌசா அடாமோ ஆகியோர் வெங்கையா நாயுடு மற்றும் அவரது மனைவியை விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றனர். இந்த பயணத்தின் போது, கபோன் பிரதமர், அதிபர் உள்பட அந்நாட்டு தலைவர்களுடன் துணை ஜனாதிபதி இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் கபோன் தொழில்துறையினருடன் கலந்துரையாடும் அவர், இந்திய வம்சாவளியினரையும் சந்திக்கிறார். 2வது கட்டமாக ஜூன் 1 முதல் 3 வரை செனகல் நாட்டிற்கு செல்லும் வெங்கையாநாயுடு, அந்நாட்டு அதிபர் மெக்கி சால் உடன் பேச்சுவார்த்தை நடத்துவதுடன், செனகல் தேசிய சட்டப்பேரவை சபாநாயகர் முஸ்தபா நியாசேவையும் சந்திக்கவுள்ளார்.

தமது பயணத்தின் நிறைவாக ஜூன் 4 முதல் 7-ந் தேதி வரை கத்தார் செல்லும் வெங்கையாநாயுடு, அந்நாட்டின் துணை அதிபர் ஷேக் அப்துல்லா பின் ஹமத் அல் தானியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். வருகிற ஜூன் 7-ந் தேதி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் இந்த 3 நாடுகள் பயணம் நிறைவுபெறுகிறது.

இதையும் படிங்க: Crime: ஆறு குழந்தைகளை அடுத்தடுத்து கிணற்றில் வீசி கொலை செய்த தாய்