Train Fare: ரயிலில் மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சலுகை இல்லை

ரயிலில் மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சலுகை இல்லை

Train Fare: ரயில்வே துறையில் டிக்கெட் சலுகை பெறுவதில், விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் என பலவகை பயணிகள் இருந்தாலும், மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டில் அதிக சலுகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆணாக இருந்தால், 40 சதவீதம், பெண்ணாக இருந்தால் 50 சதவீத சலுகை அளிக்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கான சலுகை அமலில் இருந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பாதிப்பின் காரணமாக ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது.

சுமார் 3 மாத கால முழு தடைக்குப் பிறகுதான் ரயில்வே தொடங்கப்பட்டது. அதுவும் தொடக்கத்தில் குறைந்த அளவிலான ரயில்களே இயக்கப்பட்டன. அப்போது, ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்புச் சலுகைகள் வழங்கப்படவில்லை. கடந்த ஓராண்டு காலமாக ரயில் சேவை வழக்கம்போல செயல்பட்டுவருகிறது. அதனால், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளைத் மீண்டும் வழங்கவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துவந்தன.

ஆனால், மத்திய அரசு இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்தது. இந்த விவகாரம் குறித்து இரண்டு மாதங்களுக்கு முன்பு மக்களவையில் விளக்கம் அளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘மூத்த குடிமக்கள் உள்பட அனைத்து பிரிவினருக்கும் கட்டண சலுகை வழங்குவது ரயில்வே நிர்வாகத்துக்கு கடுமையான நிதிச் சுமையை ஏற்படுத்தும். இப்போதைய சூழலில் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை வழங்கும் திட்டம் இல்லை’ என்று தெரிவித்தார்.

இந்தநிலையில், ஜூலை 1-ம் தேதி முதல் ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகை தொடங்கவுள்ளது என்று செய்திகள் வெளியாகின. இதுகுறித்து மத்திய செய்தி மற்றும் தகவல்துறை ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளது.

அந்த பதிவில், ‘ஜூலை 1 ஆம் தேதி முதல் ரயிலில் மூத்த குடிமக்களுக்கான சலுகை அமலுக்கு வர உள்ளதாக பொய்யான ஊடக தகவல் தெரிவிக்கிறது. இது போன்ற எந்த அறிவிப்பையும் ரயில்வே அமைச்சகம் வெளியிடவில்லை. மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள் & மாணவர்களுக்கு மட்டுமே பயண கட்டண சலுகையை இந்திய ரயில்வே வழங்கி வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Agneepath Scheme: மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம்