லக்னோ: (A terrible fire disaster) உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள இந்திரா நகரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி உயிரிழந்தார் மற்றும் அவரது மனைவி மற்றும் மகன் பலத்த காயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளது.
தீ விபத்தில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தினேஷ் சந்திர பாண்டே (IPS officer Dinesh Chandra Pandey) உயிரிழந்தார். மனைவி அருணா, மகன் சஷாங்க் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர் தனது மனைவி மற்றும் மகனுடன் அமர்ந்திருந்தபோது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடனே வீட்டில் இருந்த 3 பேர் வெளியே ஓட முயன்றனர். ஆனால் மூவரும் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. ஐபிஎஸ் அதிகாரி தினேஷ் சந்திர பாண்டே தீயில் சிக்கி உயிரிழந்தார்.
தீயணைப்பு வீரர்கள் (Firefighters) உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து 3 வாகனங்களில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், இந்திரா நகர் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் வீட்டிற்கு வருவதற்குள், வீடு முழுவதும் அடர்ந்த புகை சூழ்ந்தது. வீட்டிற்குள் எதுவும் தெரியவில்லை. தீயணைப்பு வீரர்கள் ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
முதல் தளத்தில் உள்ள அறையில் (In a room on the first floor) தினேஷ் பாண்டே, அவரது மனைவி மற்றும் மகன் மயங்கிக் கிடப்பதை அறிந்த தீயணைப்புத் துறையினர் மூவரையும் வீட்டிற்கு வெளியே கொண்டு வந்தனர். ஆனால், தினேஷ் சந்திரா ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மனைவி மற்றும் மகன் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தீ விபத்துக்கான சரியான காரணம் தெரியவில்லை. பாண்டேவின் மரணத்திற்குப் பிறகு, சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.



