PM to visit Karnataka on 6th: பிரதமர் வரும் 6ம் தேதி கர்நாடகா வருகை

பெங்களூரு: Prime Minister Narendra Modi will visit Karnataka on 6th February. பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் 6ம் தேதி கர்நாடகாவிற்கு வருகை தருகிறார்.

பெங்களுருவில் இந்திய எரிசக்தி வாரம் 2023 நிகழ்வை காலை சுமார் 11:30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

அதன்பின், பிற்பகல் 3:30 மணியளவில், துமகுருவில் உள்ள எச்ஏஎல் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பெங்களுருவில் இந்திய எரிசக்தி வாரம் 2023 நிகழ்வை பிரதமர் தொடங்கி வைக்கிறார். பிப்ரவரி 6 முதல் 8 வரை நடைபெறும். அந்த நிகழ்வு, இந்தியா எரிசக்தி ஆற்றலில் சிறந்து விளங்குவதை உலகிற்கு பறை சாற்றும் நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு மரபு மற்றும் மரபுசாரா எரிசக்தித் துறை, அரசுகள் மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த தலைவர்களை ஒன்றிணைத்து, சவால்கள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றி விவாதிக்கும்.

இதில் உலகம் முழுவதும் இருந்து 30க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள். 30,000 பிரதிநிதிகள், 1,000 கண்காட்சியாளர்கள் மற்றும் 500 பேச்சாளர்கள் இந்தியாவின் எரிசக்தி எதிர்காலத்தின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விவாதிக்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் போது, உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஒரு வட்டமேசை உரையாடலில் பிரதமர் பங்கேற்பார். பசுமை ஆற்றல் துறையில் பல்வேறு முன்முயற்சிகளையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

எரிசக்தித் துறையில், தற்சார்புத் தன்மையை அடைய எத்தனால் கலப்புத் திட்டம் மீதான அரசின் கவனம் முக்கியத்துவம் பெறும். மத்திய அரசின் தொடர் முயற்சியால், 2013-14-ல் இருந்து எத்தனால் உற்பத்தி திறன் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.

எத்தனால் கலப்புத் திட்டம் மற்றும் உயிரி எரிபொருள் திட்டத்தின் கீழ் கடந்த எட்டு ஆண்டுகளில் செய்த சாதனைகள் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், 318 லட்சம் மெட்ரிக் டன் கரியமில வாய்வு உமிழ்வைக் குறைத்தல் மற்றும் ரூ.54,000 கோடி மதிப்பிலான அந்நியச் செலாவணி சேமிப்பு உள்ளிட்ட பல நன்மைகளையும் ஏற்படுத்தியுள்ளன.

இதன் விளைவாக, 2014 முதல் 2022 வரை எத்தனால் விநியோகத்திற்காக சுமார் ரூ 81,800 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ரூ 49,000 கோடிக்கும் மேல் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. பசுமை எரிபொருட்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பசுமை இயக்க பேரணியை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘பாட்டிலற்ற’ முயற்சி முன்முயற்சியின் கீழ், சீருடைகள் வழங்கும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஒவ்வொரு சீருடையும் சுமார் 28 பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி மூலம் செய்யப்பட்டது ஆகும்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வீட்டுப் பயன்பாட்டிற்கான சோலார் சமையல் இரட்டை-அடுப்பு மாதிரியை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். இது ஒரு புரட்சிகர உட்புற சோலார் சமையல் தீர்வாகும். இது சூரிய மற்றும் துணை ஆற்றல் ஆதாரங்கள் மூலம் ஒரே நேரத்தில் வேலை செய்கிறது.

பாதுகாப்புத் துறையில் தற்சார்புத்தன்மையை அடையும் மற்றொரு படியாக, துமகுருவில் உள்ள ஹெச்ஏஎல் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை நாட்டுக்கு பிரதமர் அர்ப்பணிக்கிறார்.

துமகுரு தொழிற்பேட்டை மற்றும் துமகுருவில் இரண்டு ஜல் ஜீவன் மிஷன் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.