பிரதமர் மோடி நாளை சென்னை வருகை: டிரோன்கள் பறக்கத் தடை, 5 அடுக்கு பாதுகாப்பு

narendra modi
தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

PM Modi: பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக வரும் 26-ம் தேதி (வியாழக்கிழமை) சென்னைக்கு வருகிறார்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள், ரெயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதற்காக நாளை மாலை ஹைதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார்.

பின்னர், அவர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ஐஎன்எஸ் அடையாறு வந்து, கார் மூலம் நேரு விளையாட்டு அரங்கம் வருகிறார். ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு 5.45 மணிக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு இரவு 7 மணிவரை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

அந்த நிகழ்ச்சியில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான 11 மக்கள் நலத் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை ஆற்றுகிறார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி முன்னிலையில் இந்த விழா நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார்.

நிகழ்ச்சி முடிந்ததும் 7.05 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இருந்து புறப்பட்டு 7.35 மணிக்கு சென்னை விமான நிலையத்தை சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து 7.40 மணிக்கு இந்திய விமானப் படை ஐ.ஏ.எப். பிபிஜே விமானத்தில் புறப்பட்டு டெல்லிக்கு இரவு 10.25 மணிக்கு செல்கிறார்.

சென்னை வரும் பிரதமரிடம் தமிழகம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி மனு அளிப்பார் என்று கூறப்படுகிறது. இதனிடையே, பிரதமர் மோடி வருகையை ஒட்டி சென்னையில் 22 ஆயிரம் போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது.

சென்னையில் டிரோன்கள் ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்க மக்கள் என்னை விரும்புகிறார்கள்- சசிகலா