குஜராத்தில் உப்பு தொழிற்சாலையில் சுவர் இடிந்து 12 பேர் உயிரிழப்பு

Salt factory wall collapse
குஜராத்தில் உப்பு தொழிற்சாலை

Salt factory wall collapse: குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டம் ஹல்வாட் தொழில்துறை பகுதிக்குள் அமைந்துள்ளது சாகர் உப்பு தொழிற்சாலை. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தொழிற்சாலையில், சாக்கு மூட்டையில் உப்பு நிரப்பும் பணி நடந்துக் கொண்டிருந்தபோது அங்கிருந்த சுவர் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், 20 முதல் 30 தொழிலாளர்கள் புதையுண்டு இருக்கலாம் என்றும், ஆனால் இதுவரை இடிபாடுகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கக்கூடிய மற்றவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்வதாக மாநில தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சரும் உள்ளூர் எம்எல்ஏவுமான பிரிஜேஷ் மெர்ஜா தெரிவித்தார்.

மேலும், சுவர் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ” மோர்பியில் சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்து இதயத்தை உருக்குகிறது. இந்த துக்க நேரத்தில் என் எண்ணங்கள் உயிரிழந்த குடும்பத்தினருடன் இருக்கும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். உள்ளூர் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்.

மோர்பியில் நடந்த சோகத்தால் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ப.சிதம்பரத்தை நிறுத்த அதிக வாய்ப்புள்ளது – கே.எஸ்.அழகிரி