PM inaugurates Global Investors Summit 2023: லக்னோவில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு: பிரதமர் தொடங்கி வைப்பு

லக்னோ: PM inaugurates Uttar Pradesh Global Investors Summit 2023 in Lucknow. லக்னோவில், உத்தரப்பிரதேச உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது உலகளாவிய வர்த்தக கண்காட்சியைத் தொடங்கி வைத்து, முதலீட்டாளர் உத்தரப்பிரதேசம் 2.0 திட்டத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார். உத்தரபிரதேச உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு என்பது உத்தரப்பிரதேச மாநில அரசின் முன்னோடி முதலீட்டு மாநாடாகும். தொழில்துறையினர், கல்வியாளர்கள், உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் வருகை தருவதன் மூலம் வர்த்தக வாய்ப்புகள் மற்றும் கூட்டாண்மைக்கான வழிமுறைகள் கண்டறியப்படும்‌. நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியையும் பிரதமர் சுற்றிப் பார்த்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பிரதமராகவும், உத்தரப்பிரதேச மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் கொள்கை தயாரிப்பாளர்களை வரவேற்றார்.

உத்தரப் பிரதேச பூமி, அதன் கலாச்சார சிறப்பு, புகழ்பெற்ற வரலாறு மற்றும் செழுமையான பாரம்பரியத்திற்குப் பெயர் பெற்றது என்று பிரதமர் புகழ்ந்துரைத்தார். மாநிலத்தின் பெருமைகளைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர், முன்பு வளர்ச்சியின்மை, மோசமான சட்டம் ஒழுங்கு நிலை ஆகியவற்றுடன் அந்த மாநிலம் சம்பந்தப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டினார். முந்தைய காலங்களில் தினசரி அடிப்படையில் வெளிப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான ஊழல்களையும் அவர் நினைவு கூர்ந்தார். 5-6 ஆண்டுகளுக்குள் உத்தரப் பிரதேசம் புதிய அடையாளத்தை உருவாக்கியுள்ளது என்றார் பிரதமர்.

இப்போது உத்தரப் பிரதேசம் நல்ல நிர்வாகம், சிறந்த சட்டம் ஒழுங்கு நிலைமை, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பெயர் பெற்றுள்ளதுடன், வளத்தை உருவாக்குபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் இங்கு உருவாக்கப்படுகின்றன என்று பிரதமர் கூறினார். உ.பி.யில் சிறந்த உள்கட்டமைப்புக்கான முயற்சிகள் பலனளித்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர், 5 சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட ஒரே மாநிலமாக உ.பி., விரைவில் அறியப்படும் என்றார்.

சரக்கு வழித்தடமானது மகாராஷ்டிராவின் கடற்கரையுடன் மாநிலத்தை நேரடியாக இணைக்கும். எளிதாக வணிகம் செய்வதை உறுதி செய்வதற்கான உ.பி. அரசின் சிந்தனையில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று உ.பி., நம்பிக்கை மற்றும் உத்வேகத்தின் ஆதாரமாக மாறியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். உலக அரங்கில் இந்தியா ஒரு பிரகாசமான இடமாக மாறியது போல் உ.பி., தேசத்திற்கு ஒரு பிரகாசமான இடமாக மாறியுள்ளது என்று அவர் கூறினார்.

தொற்றுநோய் மற்றும் போரை எதிர்கொள்வதுடன் மட்டுமல்லாமல், விரைவாக மீண்டெழுந்து காட்டியுள்ளதால், உலகின் ஒவ்வொரு நம்பகமான குரலும் இந்தியப் பொருளாதாரத்தின் ஏறுவரிசையைப் பற்றி நம்பிக்கையுடன் இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

இந்திய சமுதாயம் மற்றும் இந்திய இளைஞர்களின் சிந்தனை மற்றும் அபிலாஷைகளில் காணப்படும் மிகப்பெரிய மாற்றத்தை பிரதமர் சுட்டிக்காட்டினார். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் வளர்ச்சிப் பாதையில் செல்ல விரும்புவதாகவும், வரும் காலங்களில் ‘வளர்ந்த பாரதம் ’காண விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளுக்கு உத்வேகத்தை வழங்கும் அரசுக்கு, இந்திய சமூகத்தின் விருப்பங்களே உந்து சக்தியாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். உத்தரப் பிரதேசத்தின் பரப்பளவு மற்றும் மக்கள் தொகை பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவைப் போலவே உ.பி.யிலும் ஒரு லட்சிய சமூகம் உங்களுக்காகக் காத்திருக்கிறது என்று முதலீட்டாளர்களிடம் தெரிவித்தார்.

டிஜிட்டல் புரட்சி காரணமாக உத்தரப்பிரதேச சமூகம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியையும், தொடர்புகளையும் பெற்றிருக்கிறது. “ஒரு சந்தை என்ற முறையில் இந்தியா தடை எதையும் கொண்டிருக்கவில்லை. நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. தற்போது இந்தியா மேற்கொள்ளும் சீர்திருத்தங்கள் கட்டாயத்தால் அல்ல, மரபால்” என்று அவர் கூறினார்.

இந்தியா இன்று வேகம் மற்றும் அளவில் முன்னேற்றத்தை தொடங்கியுள்ளது என்று திட்டவட்டமாக பிரதமர் தெரிவித்தார். இந்தியா மீது நம்பிக்கை கொள்வதற்கு இது மிகப்பெரிய காரணமாக உள்ளது என்று அவர் கூறினார்.

பட்ஜெட் பற்றி பேசிய பிரதமர், அடிப்படைக் கட்டமைப்புக்கு அதிகரிக்கும் ஒதுக்கீட்டை கோடிட்டு காட்டினார். இந்தியாவில் சுகாதாரம், கல்வி, சமூக கட்டமைப்பு ஆகியவற்றில் வாய்ப்புகள் இருப்பது பற்றியும் அவர் பேசினார். இந்தியா மேற்கொண்டுள்ள பசுமை வளர்ச்சி பாதையில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள முதலீட்டாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் எரிசக்தி பரிமாற்றத்திற்காக மட்டும் 35,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருந்ததாக அவர் கூறினார்.

இந்தியாவின் செல்பேசி தயாரிப்புகளில் உத்தரப்பிரதேசம் அதிகபட்சமாக 60 சதவீதத்தை பெற்றிருப்பதாக பிரதமர் தெரிவித்தார். நாட்டின் இரண்டு பாதுகாப்புத் தொழில் துறை வழித்தடத்தில் ஒன்று, உத்தரப்பிரதேசத்தில் உருவாக்கப்படுவதாக அவர் கூறினார்.

பல்வேறு வகையான சாகுபடி பயிர்கள் பற்றி பேசிய பிரதமர், விவசாயிகளுக்கு கூடுதலான நிதியுதவி கிடைப்பது பற்றியும், இடுபொருட்கள் விலை குறைந்து இருப்பது பற்றியும் எடுத்துரைத்தார். இயற்கை வேளாண்மை குறித்தும் அவர் விரிவாக பேசினார். உத்தரப்பிரதேசத்தின் கங்கைக்கரை பகுதியில் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு இருபுறங்களிலும் இயற்கை வேளாண்மை தொடங்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். இந்தியாவில் ஸ்ரீ அன்னா என்று அழைக்கப்படுகின்ற சிறுதானியங்களின் ஊட்டசத்து மதிப்பு பற்றி பிரதமர் எடுத்துரைத்தார். உலக அளவில் ஊட்டச்சத்து பாதுகாப்பின் அவசியம் பற்றி குறிப்பிட்ட அவர், இதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளையும் எடுத்துரைத்தார். உண்பதற்கும், சமைப்பதற்கும் தயார் நிலையில் உள்ள ஸ்ரீ அன்னாவில் முதலீட்டுக்கான வாய்ப்புகளை முதலீட்டாளர்கள் கண்டறிய வேண்டும் என்று அவர் கூறினார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பட்டியலிட்ட பிரதமர் மகாயோகி குரு கோரக்நாத் ஆயுஷ் பல்கலைக்கழகம், அடல்பிகாரி வாஜ்பாய் சுகாதார பல்கலைக்கழகம், ராஜா மகேந்திர பிரதாப் சிங் பல்கலைக்கழகம், மேஜர் தயான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிலையங்கள் திறன் மேம்பாடு சார்ந்த பல்வேறு பாடத்திட்டங்களை கற்பித்து வருவதையும் சுட்டிக்காட்டினார். திறன் மேம்பாட்டு இயக்கத்தின்கீழ், 16 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

லக்னோ பிஜிஐ எனப்படும் மருத்துவ நிறுவனத்திலும் கான்பூர் ஐஐடியிலும் உத்தரப்பிரதேச அரசு செயற்கை நுண்ணறிவு சார்ந்த பயிற்சி அளித்து வருவதாகவும் இதன்மூலம் நாட்டின் ஸ்டார்ட்அப் புரட்சியில் அந்த மாநிலம் தன்னுடைய பங்களிப்பை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். இளைஞர்களின் திறமையை அங்கீகரித்தும் அவர்களுக்கான தளத்தை உருவாக்க ஏதுவாக ஆயிரம் காப்பகங்களையும் மூன்று கலை மற்றும் கலாச்சார மையங்களையும் உருவாக்க உத்தரப்பிரதேச அரசு இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

உரையின் நிறைவாக இரட்டைஎன்ஜின் அரசாங்கத்தின் சாதக அம்சங்களை குறிப்பிட்ட பிரதமர், இரட்டை அரசின் நடவடிக்கைகளால், உத்தரப்பிரதேச மாநிலம் மாபெரும் வளர்ச்சி கண்டிருப்பதாகக் கூறினார். எனவே செழிப்பின் அங்கமாக மாறுவதற்கு முதலீட்டாளர்களும், தொழிலதிபர்களும் இனி ஒரு நிமிடத்தையும் வீணாக்க வேண்டாம் என கேட்டுக்கொண்ட பிரதமர், உலகின் செழிப்பு இந்தியாவின் செழிப்பில் அடங்கியிருக்கிறது. எனவே, உங்களுடைய பங்களிப்பு இந்தியாவின் செழிப்பின் பயணத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறி பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்தி பென் படேல், முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மாநில அமைச்சர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உலக நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வித்துறை நிபுணர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவரும் உத்தரப்பிரதேச அரசின் முயற்சியாகவே, பிப்ரவரி 10-12 ஆம் தேதி வரையிலான உத்தரப்பிரதேச சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு 2023 நடத்தப்படுகிறது. உலக நாடுகளில் உள்ள தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதுடன், நாடுகளுக்கு இடையேயான நட்புறவை பலப்படுத்துவதற்கும் இந்த மாநாடு வழிவகை செய்யும்.