Officials of Navy meeting with the President: கடற்படை, தொலை தொடர்புத் துறை அதிகாரிகள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு

புதுடெல்லி: Officials of Navy, Telecommunication Department meeting with the President. கடற்படை, மத்திய பொறியியல் துறை இந்திய அஞ்சல் மற்றும் தொலை தொடர்புத் துறை அதிகாரிகள் குடியரசுத் தலைவருடன் இன்று சந்தித்தனர்.

புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்திய கடற்படை மேலாண்மை சேவை, மத்திய பொறியியல் (சாலை) துறையின் உதவி நிர்வாகப் பொறியாளர்கள், இந்திய அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்புத் துறையின் கணக்கு மற்றும் நிதிசேவைப் பிரிவின் பயிற்சி அதிகாரிகள் ஆகியோர் குடியரசுத் தலைவ திரௌபதி முர்முவை இன்று சந்தித்தனர்.

இந்திய அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்புத் துறை பயிற்சி அதிகாரிகள் மத்தியில் பேசிய குடியரசுத் தலைவர், டிஜிட்டல் மயமாக்கல் இலக்கை அடைந்து, பொருளாதார வளர்ச்சிக்கு அடிகோலுவதில் தொலைத் தொடர்புத் துறையின் பங்களிப்பு இன்றியமையாதது என்றார். டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்புகள் மத்திய அரசின் பல்வேறு பொது சேவைகளை வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாற்ற பேருதவி செய்திருப்பதாகத் தெரிவித்தார். கிராமம் மற்றும் குக்கிராமப் பகுதிகளில் வசிப்போரையும் தொடர்பு எல்லைக்குள் கொண்டுவர மேற்கொண்டுள்ள முயற்சிகளைத் தொடர வேண்டும் எனவும் குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டார்.

இந்திய கடற்படையின் தளவாட மேலாண்மை சேவைத் துறை அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய அவர், நமது கடல் எல்லையை பாதுகாக்கும் பணியை இந்திய கடற்படையினர் வெற்றிகரமாக செய்து வருவதாகவும் குறிப்பாக, சவால்களை எதிர்கொள்ளும் காலங்களில் வர்த்தக வழித்தடங்களில் உதவிகளை அளிப்பதில் திறம்பட செயலாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார். பேரிடர் காலங்களில் கடற்படை கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் விமானங்களை விரைந்து அனுப்புவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டியது கட்டாயம் எனவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேட்டுக்கொண்டார்.

மத்திய பொறியியல் துறை (சாலை) சேவை நிர்வாக அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், பொருளாதார வளர்ச்சி மூலம் நாட்டின் மேம்பாட்டிற்கு சாலைகள் இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் முக்கியப் பங்காற்றுவதாகக் கூறினார். அண்மைக் காலங்களாக பல்வேறு பகுதிகளில் புதிய நெடுஞ்சாலைகளை உருவாக்குவதிலும், நடைமுறையில் உள்ள சாலைகளை விரிவாக்கம் செய்வதிலும் மத்திய அரசு பல முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை சரக்குப் போக்குவரத்து வேகமாக நடைபெறுவதை உறுதிசெய்வதுடன், மக்களுக்கான வேலைவாய்ப்பையும் உறுதி செய்திருக்கிறது என்று கூறினார். சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சியை கருத்தில் கொண்டு, உள்கட்டமைப்பு வசதிக்கான திட்டங்களை உறுதி செய்ய வேண்டியதே, மத்திய பொறியியல் சேவை அதிகாரிகளின் பொறுப்பு என்று குறிப்பிட்ட திரௌபதி முர்மு, சாலை விபத்துகளை குறைப்பதற்கான சிறந்த பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்குமாறும் கேட்டுக்கொண்டார்.