National Metallurgist Award Scheme: தேசிய உலோகவியலாளர் விருதுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுடெல்லி: தேசிய உலோகவியலாளர் விருதுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தேசிய உலோகவியலாளர் விருது 2022–ஐ வழங்க எஃகு துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 11.10.2022. விண்ணப்பங்களை https://awards.steel.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் .

இரும்பு மற்றும் எஃகு துறையில் உற்பத்தி, ஆராய்ச்சி, வடிவமைப்பு, கல்வி, கழிவு மேலாண்மை, எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பு செய்த உலோகவியலாளர்களை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது. தற்சார்பு இந்தியா இயக்கத்தின் நோக்கங்களை அடையும் வகையில் சிறப்பான முறையில் இத்துறையில் பங்களிப்பு செய்தவர்களுக்கும் இவ்விருது அளிக்கப்படுகிறது. விண்ணப்பங்களை நிறுவனங்களோ / அமைப்புகளோ அல்லது பொதுமக்களோ சமர்ப்பிக்கலாம். ஆண்டு தோறும் பிப்ரவரி 3-ம் நாள் தேசிய உலோவியலாளர் விருது வழங்கப்படுகிறது.

வாழ்நாள் சாதனையாளர் விருது, தேசிய உலோகவியலாளர் விருது, இளைய உலோகவியலாளர் (சுற்றுச்சூழல் அறிவியல்), இளைய உலோகவியலாளர் (உலோக அறிவியல்), இரும்பு மற்றும் எஃகு துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான விருது என ஐந்து விருதுகள் வழங்கப்படுகிறது.

உலக முன்மாதிரி திறன் போட்டியில் லிகித் ஒய்பி வெண்கலப் பதக்கம்:
உலக முன்மாதிரி திறன் போட்டி 2022-ல் லிகித் ஒய்பி வெண்கலப் பதக்கம் வென்றார். டொயோட்டா தொழில்நுட்ப பயிற்சி மையத்தில் இயந்திரவியலில் லிக்கித் பட்டயம் பெற்றுள்ளார். இப்போட்டிக்காக ஜனவரி 2022-லிருந்து அவர் பயிற்சி பெற்றார். இந்தியாவின் தேசிய திறன் போட்டியான “இந்தியா திறன் 2021”-ல் முன்மாதிரி திறன் பிரிவில் வெற்றி பெற்றார். டொயோட்டா இந்தியா நிபுணரும், சர்வதேச உலகத்திறன் போட்டியில் முன்மாதிரி திறன் பிரிவின் முதன்மை நிபுணருமான பாஸ்கர் சிங் மூலம் அவர் பயிற்சி பெற்றுள்ளார்.

சர்வதேச உலகத்திறன் உறுப்பு நாடுகளின் திறன் மிக்க இளைஞர்களுக்கு இடையே இப்போட்டி நடத்தப்படுகிறது. உலகத்திறன் போட்டி 2022-ன் முதல் கட்டப் போட்டி சுவிட்சர்லாந்து நாட்டின் பெர்ன் நகரில் செப்டம்பர் 7 முதல் 10ம் தேதி வரை நடைபெற்றது.