National Conference on Soil Health Management: மண்வள மேலாண்மை குறித்த தேசியக் கருத்தரங்கை மத்திய அமைச்சர் தொடங்கிவைப்பு

புதுடெல்லி: Union Agriculture Minister inaugurates the National Conference on Soil Health Management for Sustainable Farming. நீடித்த வேளாண்மைக்கான மண்வள மேலாண்மை குறித்த தேசியக் கருத்தரங்கை மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று தொடங்கிவைத்தார்.

இதில் பேசிய அமைச்சர், ரசாயன வேளாண்மை உள்ளிட்ட காரணங்களால் மண்வளம் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதுடன், பருவநிலை மாற்றம் இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் மாபெரும் சவாலாக உருவெடுத்திருப்பதாகக் கூறினார். இதனை எதிர்கொள்வதற்காக நரேந்திர மோடி தலைமையிலான அரசு அவ்வப்போது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைய மத்திய அரசு உறுதிபூண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மண்ணின் ரசாயன கார்பன் தன்மை குறைந்து வருவது மிகப்பெரிய பிரச்சனை என தெரிவித்த அவர், இதனை எதிர்கொள்வதற்கு ஏதுவாக மண் வளத்தை மேம்படுத்துவதுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை வேளாண்மையை முன்னிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்தியாவின் பாரம்பரிய முறையான இயற்கை விவசாயத்தை மீண்டும் செயல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், குறிப்பாக ஆந்திரப் பிரதேசம், குஜராத், இமாச்சலப்பிரதேசம், ஒடிசா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் இயற்கை வேளாண்மையை செயல்படுத்த முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த ஓராண்டில் 17 மாநிலங்களில் மொத்தம் 4.78 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு கூடுதலாக இயற்கை வேளாண்மைக்கு மாறியுள்ளதாகவும், இயற்கை வேளாண்மையை முன்னிறுத்துவதற்காக மத்திய அரசு இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கம் என்ற பிரத்யேக திட்டத்தை செயல்படுத்த 1,584 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் நரேந்திர சிங் தோமர் கூறினார்.

மத்திய அரசு மண்வளத் திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் 2 கட்டங்களாக மொத்தம் 22 கோடி மண்வள அட்டைகள், நாடுமுழுவதும் உள்ள விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேபோல் மண்வளத்தை மேம்படுத்துவதற்காக 499 நிரந்தர மண் பரிசோதனை ஆய்வகங்களும், 113 நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகங்களும் 8,811 சிறு மண் பரிசோதனை ஆய்வகங்களும், 2,395 கிராம மண் பரிசோதனை ஆய்வகங்களும் அமைக்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

ரசாயன வேளாண்மையின் காரணமாக மண்வளம் முற்றிலும் மோசமடைந்திருப்பதால் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு ரசாயன விவசாயத்தைக் கைவிட இந்தியாவுடன், உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வலியுறுத்தினார்.