Mobile Crematorium Service: கர்நாடகாவில் முதல் முறையாக உடுப்பியில் நடமாடும் தகன மேடை

பெங்களூரு: இந்தியாவின் மக்கள் தொகை கடந்த 2021ம் ஆண்டு (Mobile Crematorium Service) நிலவரப்படி 140 கோடியை தாண்டி விட்டதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. அதிகமான மக்கள் அடர்த்தி கொண்ட நாட்டில் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கான போதிய இடவசதி இல்லாத நிலையே ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் சில இடங்களில் பட்டியலின சமூகத்தினருக்கு தகனம் செய்வதற்காக நிலங்கள் இன்றளவும் மறுக்கப்படுகிறது. இது போன்று இறப்பிலும் ஒருவரை தீண்டாமையை காரணம் காட்டி ஒதுக்குவது வெட்கக்கேடான ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகாவில் முதூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு சுமார் 600க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கிறது. இந்த கிராமத்தில் உயிரிழப்பவர்களை தகனம் செய்வதற்கு போதுமான இடவசதி செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த கிராமத்தில் இறப்பவர்களை குந்தாப்புராவில் தகனம் செய்யும் இடம் அமைந்துள்ளது. இந்த இடம் கிராமத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. யாராவது ஒருவர் இறந்தால் அங்கு சென்றுதான் கிராம மக்கள் தகனம் செய்யும் நிலையே நீடித்து வருகிறது. இதற்கிடையே கடந்த 2022-ம் ஆண்டு அந்த கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். அப்போது அவரது உடலை மற்றொரு சமூகத்திற்கு சொந்தமான மயானத்தில் தகனம் செய்வதற்கு முடிவு செய்தனர். இதற்கு அந்த சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து முதியவரின் உடல், அவரது வீட்டின் அருகே சாலையில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கிராமத்தில் உள்ள அவல நிலையை மாற்ற முதூர் கூட்டுறவு வங்கி முடிவு செய்து அதற்காக வங்கி சார்பில் இலவசமாக நடமாடும் தகன மேடை வழங்கப்பட்டுள்ளது. வங்கி தலைவர் விஜய சாஸ்திரி மற்றும் செயல் அதிகாரி பிரபாகர் பூஜாரி ஆகியோர் கேரளாவை சேர்ந்த ஸ்டார் சேர் நிறுவனத்திடம் இருந்து ரூ.5.80 லட்சம் மதிப்பிலான நடமாடும் தகன மேடையை வாங்கியுள்ளனர். இந்த தகன மேடையை கிராமத்தில் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம் எனவும், இதற்காக யாரும் கட்டணம் செலுத்த வேண்டாம் எனவும் வங்கி சார்பில் கூறப்பட்டுள்ளது.