India Medical Technology Expo Date Change: இந்திய மருத்துவ தொழில்நுட்ப கண்காட்சி தேதி மாற்றம்

புதுடெல்லி: India Medical Technology Expo Date Change. புதுதில்லி ஏரோசிட்டி மைதானத்தில் நடைபெறவிருந்த இந்திய மருத்துவ தொழில்நுட்ப கண்காட்சி தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள இந்திய மருத்துவ தொழில்நுட்பத் துறையின் முதலாவது இந்திய மருத்துவ தொழில்நுட்ப கண்காட்சி நடைபெறும் நாட்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போது இக்கண்காட்சி ஜனவரி 17 முதல் 19 வரை புதுதில்லி ஏரோசிட்டி மைதானத்தில் நடைபெறும்.

முன்னதாக இந்த 3 நாள் கண்காட்சி டிசம்பர் 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. இந்திய மருத்துவ தொழில்நுட்ப கண்காட்சியின் இணையதளம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி தொடங்கப்பட்டது.

மத்திய அரசின் மருந்து உற்பத்தி துறை மருத்துவ உபகரணங்கள் தொழில்துறையுடன் இணைந்து முதலாவது இந்திய மருத்துவ தொழில்நுட்ப மூன்று நாள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதை இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (ஃபிக்கி) ஒருங்கிணைக்கிறது. “உபகரணம், நோய் கண்டறிதல் மற்றும் மின்னணு எதிர்காலம்” என்ற கருப்பொருளில் இக்கண்காட்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்ட பயனாளர்கள், ஸ்டார்ட் அப், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை, புதுமை கண்டுபிடிப்புகள் தொழில்முனைவோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பெரிய தொழில்துறை, கல்வித்துறை, ஆராய்ச்சி நிலையங்கள், முதலீட்டாளர்கள், மாநில அரசுகள், மருத்துவ தொழில்நுட்ப பூங்காக்கள், முக்கிய அரசு அதிகாரிகள் ஆகியோரை ஒருங்கிணைத்து இத்துறையை வளர்ச்சியடைய செய்வதற்கான வழிவகைகளை காண இக்கண்காட்சியின் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியில் பங்கேற்பதற்காக இதுவரை 150க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 275-க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் சர்வதேச மருத்துவ உபகரண நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், 50-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளிட்ட தரப்பினர் உறுதி செய்துள்ளனர்.

இந்தியாவில் மருத்துவ உபகரணத்துறையின் சந்தை மதிப்பு 11 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் 50 பில்லியன் அமெரிக்க டாலராக இது வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கண்காட்சி இந்திய மருத்துவ தொழில்நுட்ப துறைக்கு தர அங்கீகாரத்தை அளிக்கும்.

தேசிய மருத்துவ தொழில்நுட்ப கண்காட்சி 2023 குறித்த விவரங்களை http://www.indiamedtechexpo.in/ இணையதளத்தில் காணலாம்.