Surat : ‘டெக்ஸ் டைல் சிட்டி ஆஃப் இந்தியா’ இந்த இடங்களுக்கு ஒரு முறையாவது சென்று வாருங்கள்

ஜவுளி, வைரம், ஆடை வடிவமைப்பு மற்றும் கலை ஆர்வலர்களின் தாயகமான சூரத் பல அழகான இடங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. கண்டிப்பாக இந்த இடங்களுக்கு ஒரு முறையாவது சென்று வாருங்கள்.

குஜராத்: (Gujarat state) குஜராத்தின் துறைமுக நகரம் சூரத். இது நாட்டின் பணக்கார நகரங்களில் ஒன்றாகும். சூரத் நகரம் “உலகின் வைர மையம்”, “இந்தியாவின் ஜவுளி நகரம்”, “இந்தியாவின் எம்பிராய்டரி தலைநகரம்” மற்றும் “மேம்பாலங்களின் நகரம்” ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் சுற்றுலா பயணிகளை கவர்கிறது.

பல கலவரங்களைக் கண்ட போதிலும், சூரத் அதன் பாரம்பரியமிக்க‌ கட்டிடக்கலை (Traditional architecture) அழகைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. கிருஷ்ணர் மதுராவிலிருந்து துவாரகைக்குச் செல்லும் போது சூரத்தில் தங்கியதாக நம்பப்படுகிறது. இது ஜவுளி, வைரம், ஆடை வடிவமைப்பு மற்றும் கலை ஆர்வலர்களின் தாயகமாகும். இது தவிர சூரத்தில் பார்க்க பல அழகான இடங்கள் உள்ளன. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்கு கண்டிப்பாக ஒரு முறையாவது சென்று வாருங்கள்.

டச்சு தோட்டம் (Dutch garden):
சூரத்தின் டச்சு தோட்டம் பசுமையான சோலை. பல்வேறு வகையான பூக்களை இங்கு காணலாம். அழகான தோட்டம், நீரூற்றுகள் மற்றும் புல் தரை விரிப்புகள் சுற்றுலா பயணிகளை அழைக்கின்றன.

சர்தார் படேல் அருங்காட்சியகம் (Sardar Patel Museum):
மோதி ஷாஹி மஹாலில் உள்ள சர்தார் படேல் அருங்காட்சியகம் சர்தார் வல்லபாய் படேலின் வாழ்க்கைக்காக அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகத்தில் ஒளி மற்றும் லேசர் காட்சிகள், 3டி காட்சிகள் ஆகியவற்றைக் காணலாம்.

தண்டி கடற்கரை (Thandi beach) :
இந்த ஊர் சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது. இந்தக் கடற்கரையிலிருந்துதான் காந்திஜி உப்பு சத்தியாக்கிரக இயக்கத்தைத் தொடங்கினார். தற்போது சுற்றுலா தலமாக மாறியுள்ளது. இங்கு சூரிய அஸ்தமனம் மற்றும் சூரிய உதயங்கள் பார்ப்போரை மிகவும் மயக்கும். விடுமுறையை அனுபவிக்க இது ஒரு சிறந்த இடம்.

சர்தானா இயற்கை பூங்கா (Sardana Nature Park):
சர்தானா இயற்கை பூங்கா சூரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு விலங்கியல் பூங்கா ஆகும். தபி ஆற்றின் வலது கரையில் பரவியுள்ள இந்த உயிரியல் பூங்கா சுமார் 81 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது. இது சிங்கங்கள், மான்கள், வங்காள புலிகள், சிறுத்தைகள், இமயமலை கரடிகள் மற்றும் நீர்யானை போன்ற விலங்குகளின் தாயகமாகும். இயற்கை ஆர்வலர்களின் சொர்க்கமாக விளங்கும் சர்தானா இயற்கை பூங்கா, அழிந்து வரும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப் பாதுகாக்கவும், பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் செயல்படுகிறது. குழந்தைகளுடன் பார்க்க அருமையான இடம்.