Ganesh idol inside bottle: பாட்டிலுக்குள் விநாயகர் சிலையை உருவாக்கிய ஒடிசா கலைஞர்

புவனேஷ்வர்: Odisha miniature artist crafts eco-friendly idol of Lord Ganesh inside bottle. புவனேஷ்வரைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் விநாயக சதுர்த்திக்காக ஒரு பாட்டிலுக்குள் சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலையை வடிவமைத்துள்ளார்.

இந்த ஆண்டின் விநாயக சதுர்த்தி இன்று நாடு முழுவதும் பல மாநிலங்களில் மிகவும் ஆடம்பரத்துடனும் ஆர்வத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட முடியாமல் மக்கள் கவலையைடைந்தனர். தற்போது கொரோனா தொற்று குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.

கணேஷோத்ஸவ் என்றும் அழைக்கப்படும் விநாயகர் சதுர்த்தி பத்து நாட்கள் சதுர்த்தி திதியில் தொடங்கி அனந்த சதுர்தசி அன்று முடிவடைகிறது. ஞானம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் கடவுளான விநாயகரின் பக்தர்கள், பாத்ரபத மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் போது அவரது பிறப்பைக் குறிக்கின்றனர்.

இந்த பண்டிகையின் போது மக்கள் தங்கள் வீடுகளுக்கு விநாயகர் சிலைகளை கொண்டு வந்து, விரதம் அனுசரித்து, வாயில் நீர் ஊறும் பலகாரங்களை தயாரித்து, இறைவனை வேண்டி, சடங்குகளை கடைபிடிப்பார்கள்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு விதமான மற்றும் வடிவத்தில் விநாயகர் சிலையை வைத்து மக்கள் வழிபடுகின்றனர். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் கேஜிஎப் திரைப்படத்தை நினைவு கூறும் வகையில் கேஜிஎப் விநாயகர் சிலையை வைத்து வழிபடுகின்றனர். அதேபோல், போலீஸ், சினிமா நடிகர்கள் என பல்வேறு சிலைகளை வடிவமைத்து வைத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஒடிசா மாநிலம், குர்தா மாவட்டத்தில் உள்ள ஜட்னி கிராமத்தைச் சேர்ந்தவர் எல்.ஈஸ்வர் ராவ், இவர் தனது படைப்பாற்றல் மூலம் மக்களுக்கு விநாயக சதுர்த்தி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு ஈஸ்வர் ராவ் அளித்த பேட்டியில், “இந்த முறை, நான் 350 மில்லி பாட்டிலைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலையை செய்தேன். இந்த களிமண் கலையை நான் தயாரிக்க ஏழு நாட்கள் எடுத்தது. ஒரு பாட்டிலில் கலையை உருவாக்குவது சவாலானது.” என அவர் தெரிவித்தார்.