eSanjeevani achieves: இ-சஞ்சீவனி ஒரே நாளில் 4.34 லட்சம் நோயாளிகளுக்கு சேவைசெய்து சாதனை

புதுடெல்லி: National telemedicine service of India – eSanjeevani achieves 8 crore teleconsultations. இந்தியாவின் தேசிய தொலை மருத்துவம் சேவையான – இ-சஞ்சீவனி ஒரே நாளில் 4.34 லட்சம் நோயாளிகளுக்கு சேவைசெய்து சாதனை படைத்துள்ளது.

மத்திய அரசின் கட்டணமில்லா தொலை மருத்துவம் சேவையான இ-சஞ்சீவனி, குறிப்பிடத்தக்க சாதனையாக, 8 கோடி தொலைத்தொடர்புகளைக் கடந்து வியக்கத்தக்க வகையில் மற்றொரு மைல்கல்லைத் தாண்டியுள்ளது. கடைசி 1 கோடி ஆலோசனைகள் குறிப்பிடத்தக்க காலக்கெடுவில் சுமார் 5 வாரங்களில் பதிவு செய்யப்பட்டவை. இது டெலிமெடிசின் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதைக் காட்டுகிறது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இ-ஹெல்த் முன்முயற்சியான, இ-சஞ்சீவனி ஒரு தேசிய டெலிமெடிசின் சேவையாகும். இது வழக்கமான நேரடி உடல்நல ஆலோசனைகளுக்கு மாற்றாக இணையதளம் வழியாக ஆலோசனை வழங்க முயற்சிக்கிறது.

இந்த முன்முயற்சி, 3 ஆண்டுகளுக்குள், உலகின் மிகப்பெரிய அரசுக்கு சொந்தமான டெலிமெடிசின் தளம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இது இரண்டு சிறப்பங்களைக் கொண்டுள்ளது. ஒன்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள நோயாளிகளை வெற்றிகரமாக சென்றடைந்துள்ளது. மற்றொன்று தேசத்தின் தொலைதூர பகுதிகளில் அதன் இருப்பை உணர்த்துகிறது.

இ-சஞ்சீவனி புறநோயாளி பிரிவு, 2,22,026 நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுடன் 1,144 இணையதளப் புறநோயாளி பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்தத் தளம் ஒரே நாளில் 4.34 லட்சம் நோயாளிகளுக்கு சேவைசெய்து சாதனை படைத்துள்ளது.

இந்தத் தளத்தைப் பயன்படுத்துவதில் முன்னணியில் இருக்கும் பத்து மாநிலங்கள்: ஆந்திரப் பிரதேசம் (28242880), மேற்கு வங்கம் (10005725), கர்நாடகா (9446699), தமிழ்நாடு (8723333), மகாராஷ்டிரா (4070430), உத்தரப் பிரதேசம் (3763092), மத்தியப் பிரதேசம் (3283607), பீகார் (2624482), தெலங்கானா (2452529), குஜராத் (1673888).