Maggi Case: மூன்று வேளையும் மேகி மட்டுமே சமைக்கிறார்- மனைவியை விவாகரத்துசெய்த கணவர்

actor-kamalhassan-quit-bigg-boss-ultimate

Maggi Case: கர்நாடகா மாநிலம் மைசூரில் மூன்று வேளையும் மேகி நூடுல்ஸை மட்டுமே தனது மனைவி சமைத்து வந்ததாக கூறி அவரிடமிருந்து கணவர் விவாகரத்து பெற்ற சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேகமான மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறைகள் பெரும்பாலான இளம் உழைக்கும் தம்பதிகளை ‘இன்ஸ்டண்ட்’ உணவுக்கு மாற்றியமைத்துள்ள நிலையில், மனைவி மேகி நூடுல்ஸை மட்டும் சமைத்ததால் கணவர் விவாகரத்து கோரிய நிலையில், முதன்மை மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி எம்.எல்.ரகுநாத், திருமண வழக்குகள் குறித்துப் பேசுகையில், தம்பதிகள் மிகச்சிறிய பிரச்சனைகளுக்காக விவாகரத்து கோருகின்றனர் என கூறியதோடு, தான் பெல்லாரி மாவட்டத்தில் மாவட்ட நீதிபதியாக இருந்தபோது இந்த வித்தியாசமான வழக்கை எதிர்கொண்டதாக கூறினார்.

மேலும், அந்த வழக்கு குறித்து அவர் கூறுகையில், ‘மேகி நூடுல்ஸைத் தவிர வேறு எந்த உணவையும் தனது மனைவிக்கு சமைக்கத் தெரியாது என கணவர் புகாரில் கூறியுள்ளார். காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவாக நூடுல்ஸ் மட்டுமே இருந்தது எனவும், அவரது மனைவி கடைக்கு மளிகை பொருட்கள் வாங்கச் சென்றால் வெறும் இன்ஸ்டண்ட் நூடுல்ஸை மட்டும் வாங்கி வந்ததாக அந்த கணவர் புகாரில் கூறியுள்ளார்’ என்றார். இதற்கு ‘மேகி வழக்கு’ என்று பெயரிட்ட நீதிபதி ரகுநாத், இறுதியில் இருவரும் பரஸ்பர சம்மதத்தின் பேரில் விவாகரத்து பெற்றதாக கூறினார்.

திருமண வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்ப்பது சற்று கடினம் என்று கூறிய நீதிபதி, பல தம்பதிகள் இடையே தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பெரும்பாலான மறு இணைவுகள் நிகழ்கின்றன என்றார். ‘தம்பதிகளுக்கு இடையே ஒரு சமரசத்தை ஏற்படுத்தவும், அவர்களை மீண்டும் இணைக்கவும் சில உணர்வு சார்ந்த விஷயங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது உடல் சார்ந்த பிரச்சனையை விட உளவியல் சார்ந்த பிரச்சனை ஆகும்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தம்பதிகள் மீண்டும் இணைந்தாலும், அவர்களிடையே பிரச்சனைகளின் வடுக்கள் இருக்கதான் செய்கிறது. 800 முதல் 900 திருமண வழக்குகளில், 20 முதல் 30 வழக்குகளில் மட்டுமே நாங்கள் வெற்றி பெறுகிறோம். முந்தைய லோக் அதாலத்தில் (Lok Adalat), சுமார் 110 விவாகரத்து வழக்குகளில், மீண்டும் இணைப்பு என்பது வெறும் 32 வழக்குகளில் மட்டும்தான் நடந்தது’ என்றார் நீதிபதி ரகுநாத்.

மைசூரில் மொத்தமுல்ல ஐந்து குடும்ப நீதிமன்றங்களில், ஒவ்வொன்றிலும் சுமார் 500 திருமண வழக்குகள் உள்ளன. அவற்றில் சுமார் 800 வழக்குகள் விவாகரத்து கோருவதற்காக உள்ளன. நீதிபதிகளை பொறுத்தவரை, சில ஆண்டுகளாக விவாகரத்து வழக்குகள் கடுமையாக அதிகரித்து வருவதாகவும், விவாகரத்து கோருவதற்கு முன் தம்பதிகள் குறைந்தது ஒரு வருடமாவது ஒன்றாக இருக்க வேண்டும் எனவும், அத்தகைய சட்டம் என ஒன்று இல்லை என்றால், திருமண மேடைகளில் இருந்தே நேரடியாக விவாகரத்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுவிடும் என்கின்றனர். திருமணமான ஒரு நாளிலேயே தம்பதிகள் விவாகரத்தை நீதிமன்றங்களில் பெறும் நிகழ்வும் உள்ளன என்றார்.

நிச்சயிக்கக்கப்பட்ட திருமணம் மட்டுமின்றி காதல் திருமணங்களிலும் விவாகரத்து மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதாக நீதிபதி வேதனை தெரிவித்தார். மேலும், கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் இருந்துதான் விவாகரத்து மனுக்கள் அதிகம் வருவதாகவும், கிராமப்புறங்களில் கிராம பஞ்சாயத்துகள் தலையிட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கின்றனர் எனவும், அத்தகைய பெண்களுக்கு சுதந்திரம் இல்லாமல், சமூகம் மற்றும் குடும்ப உணர்வுகள் மீதான அவர்களின் பயம், அவர்களை மறு இணைப்புக்கு கட்டாயப்படுத்துகிறது. ஆனால், நகரங்களில் பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாகவும், பொருளாதார ரீதியாகவும் சுதந்திரமாக உள்ளனர் என நீதிபதி கூறினார்.

இதையும் படிங்க: TN Weather: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு